*நீட் தேர்வு மையத்தை தமிழ்நாட்டிலேயே அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முடித்துவைக்கப்பட்டது. தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்*

*அதில், இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தகுதித் தேர்வு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக சிபிஎஸ்சி அமைப்பால் நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 2019 முதல் தேசிய திறனாய்வு ஏஜென்சி இந்த தேர்வினை நடத்தவுள்ளது.கடந்த ஆண்டு நீட் தேர்வை 24,720 பேர் தமிழில் எழுதினார்கள்.  தமிழகத்தில் மொத்தம் 1,14,602 பேர் தேர்வு எழுதியதில், 45,336 பேர் தேர்ச்சி பெற்றனர்*

*கடந்த வருடம் தமிழகத்தைச் சேர்ந்த 3,685 மாணவ-மாணவிகள் கேரளா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நீட் தேர்வு எழுதினர். தேர்வுக்கு கடைசி நேரத்தில் தயார் செய்ய இயலாமலும், புது இடத்தில், மொழி தெரியாத இடத்தில் தேர்வு மையத்தை தேடி அதிக மன அழுத்தத்திற்கு உட்பட்டார்கள்*

*இந்த ஆண்டும் தேவைப்படின் விண்ணப்பத்தில் குறிப்பிட வேறு இடங்களில், நிர்வாக வசதிக்காக தேர்வு மையம் ஒதுக்கப்படும் எனவும் கடந்த வருடம் தமிழ்நாட்டில் குரூப்-4 தேர்வு 9,351 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட போது சுமார் 17 லட்சம் விண்ணப்பதாரர்கள் 6,900 தேர்வு மையங்களில் எழுதினர். எனவே தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் அமைக்க போதுமான வாய்ப்பு இருப்பது உறுதியாகிறது

*அவ்வாறு இருக்கும்போது வேறு மாநிலங்களில் தேர்வு மையம் அமைப்பது தவறானது. அதேபோல தேர்வு மையத்திற்கு கைக்கடிகாரம் கொண்டு செல்லக்கூடாது. ஆனால், வகுப்பறைகளில் சுவர்க்கடிகாரம் இல்லை

*நீட் தேர்வு மையங்களில் மாணவிகளை சோதனை செய்ய தனி அறை இல்லை. மாணவிகளை சுடிதார் போடுமாறு கூறுகிறார்கள். ஆனால் துப்பட்டா போட அனுமதிப்பதில்லை. இதனால் பல மாணவிகள் மிகவும் சங்கடத்திற்கு ஆளாகின்றார்கள். தேர்வு மையங்களில் கேமராவிற்கு அனுமதி கிடையாது; ஆனால் அங்குள்ள நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிடுகிறார்கள். இதனால் மாணவிகளின் தனிப்பட்ட உரிமை பாதிக்கப்படுவதாக உள்ளது

*ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு, நீட் தேர்வு எழுதும் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் அமைக்கவும், அனைத்து தேர்வறைகளிலும் சுவர் கடிகாரம் அமைக்கவும், மாணவிகள் துப்பட்டா அணிய அனுமதிக்கவும், மாணவ மாணவியரை பரிசோதிக்க தனி அறை வசதிகளை ஏற்படுத்தவும், தேர்வு மையங்களில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடுவதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்

*இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், மாணவிகள் துப்பட்டா அணிய ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்

*மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் மூடப்பட்ட சோதனை அறைகளை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

*அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நீட் தேர்வு எழுதும் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் அமைக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்துள்ளது