வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதாகவும், உடனடியாக செயலியை அப்டேட் செய்யுமாறும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது. வீடியோ, போட்டோ, கோப்புகள் என பல முக்கிய விஷயங்கள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுகிறது. அதனால் வாட்ஸ் அப்பின் பாதுகாப்பு அம்சங்களில் அந்நிறுவனம் மிகுந்த கவனம் கொண்டுள்ளது. அதனடிப்படையில் அவ்வப்போது அப்டேட்டுகள் விடப்பட்டு செயலியின் பாதுகாப்பு அம்சம் அதிகரிக்கப்படுகிறது.

இந்நிலையில் வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயன்றதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சில பயனாளர்களை மட்டும் குறிவைத்து திறன்பெற்ற ஹேக்கர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது. ஹேக் செய்யப்பட வேண்டிய ஆட்களுக்கு ஹேக்கர்கள் வாட்ஸ் அப் அழைப்பு கொடுக்கிறார்கள். அதன் மூலம் செயலியை கண்காணிக்கும் சாப்ட்வேர் குறிப்பிட்ட செல்போனில் தானகவே இன்ஸ்டால் செய்யப்படுகிறது. அதன்பின் அந்த செல்போன் ஹேக்கர்களால் தொடர் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்களது பயனாளர்கள் அனைவரையும் உடனடியாக வாட்ஸ் அப் அப்டேட் செய்யக் கோரி அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான வாட்ஸ் அப் அப்டேட்டில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் உள்ளதாகவும், அதனை அப்டேட் செய்துகொள்ள வேண்டுமென்றும் பயனாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.