தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் செயல்பட்டு வரும் எஸ்சிஇஆர்டி யூ-டியூப் தளத்தில் கடந்த ஆறு மாதங்களாக எந்தவொரு புதிய விடியோக்களும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. 
இதனால், இந்தத் தளத்தை பார்வையிட விருப்பம் தெரிவித்துள்ள சுமார் 2 லட்சம் சந்தாதாரர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மாணவர்கள் மத்தியில் நிலவிவரும் கற்றல் குறைபாடுகளைப் போக்கும் வகையிலும், கடினமான பாடங்களையும் மாணவர்களுக்கு எளிதில் கற்பிக்கும் வகையிலும், தமிழக பள்ளிக் கல்வி துறை கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி TN SCERT என்ற யூ டியூப் தளத்தைத் தொடங்கியது. 
3,500-க்கும் மேற்பட்ட விடியோக்கள்: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (எஸ்சிஇஆர்டி) சார்பில் தொடங்கப்பட்ட இந்தத் தளத்தில் டிஎன்பிஎஸ்சி, ஜேஇஇ, நீட், பிளஸ் 1 புதிய பாடத்திட்டம் என 3,500-க்கும் மேற்பட்ட விடியோக்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
இதற்காக பாடநூல் தயாரிப்பில் ஈடுபட்ட ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல தரப்பினரும் பெரும் பங்காற்றினர். இதற்கான படப்பிடிப்புத் தளம் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. 
பாடம் நடத்துவது போல் மட்டுமல்லாது, ஆசிரியர்கள் பாடம் குறித்து உரையாடுவது போன்றும், பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் உரையாடுவது போன்றும் விடியோக்களைத் தயாரித்து பதிவேற்றம் செய்தனர். இந்த விடியோக்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் என்று தனித்தனியே தயாரித்துப் பதிவேற்றுவதால் மாணவர்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். எஸ்சிஇஆர்டி யூ-டியூப் தளம் மூன்று கோடி முறைக்கு மேல் பார்வையிடப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், இந்த யூ டியூப் தளத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் புதிய விடியோக்கள் எதுவும் பதிவேற்றம் செய்யப்பட்டவில்லை. கடந்த ஆறு மாதங்களாக பள்ளிக் கல்வித்துறையின் யூ-டியூப் தளம் தரம் உயர்த்தப்படாததால் இந்தத் தளத்தைப் பார்வையிட விருப்பம் தெரிவித்த 2 லட்சத்து 8 ஆயிரம் சந்தாதாரர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 
அதில் நுழைவுத்தேர்வுகளுக்குரிய அன்றாட நிகழ்வுகள், நிகழாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடத்திட்டத்தில் கடினமாக பகுதிகள் என மேம்படுத்தப்பட்ட விடியோக்கள் என எதையும் பார்வையிட முடியவில்லை என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேம்படுத்தப்பட்ட விடியோக்கள் இல்லை: இதுகுறித்து இந்தத் தளத்தை தொடர்ந்து பார்வையிட்டு வரும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கூறியது: 
TN SCERT யூ டியூப் தளத்தில் உள்ள விடியோக்கள் உயர்தரத்தில் இருப்பதால் செல்லிடப்பேசியில் மட்டுமல்லாது, வகுப்பறையில் புராஜக்டர் கொண்டும் பார்வையிடலாம். வழக்கமாக மூன்று நாள்களுக்கு ஒரு முறை ஒரு புதிய விடியோ வெளியாகும். ஆனால் கடந்த ஜனவரி மாதத்துக்குப் பிறகு எஸ்சிஇஆர்டி யூடியூப் தளத்தில் எந்தவொரு புதிய விடியோக்களையும் பார்க்க முடியவில்லை. ஏதாவது தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம். அது விரைவில் சரியாகும் என நினைத்தோம். ஆனால் கடந்த ஆறு மாதமாக இதே நிலையே நீடிக்கிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள், போட்டித்தேர்வர்கள் பயன்பெறும் வகையில் புதிய விடியோக்களை பதிவு செய்ய வேண்டும் என்றனர். 
அதிகாரிகள் விளக்கம்: 
இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியது: கற்றலை டிஜிட்டல் மயமாக்குவதில் பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்ட பாடநூல்கள் அனைத்திலும் க்யூ.ஆர் குறியீடு இருப்பதால் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு மாணவர்கள் அதன் மூலம் தீர்வு காண முடியும். நிகழாண்டு வெளியான பாடநூல்களில் அதன் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளோம். 
எஸ்சிஇஆர்டி தளத்தை மெருகேற்றுவது குறித்தும், தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். புதிய பாடத்திட்டங்கள், போட்டித்தேர்வர்களுக்கான விடியோக்கள் விரைவில் விடியோக்களாக தயார் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும் என்றனர்



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here