தமிழகத்தில் உள்ள அரசு, நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவை பயோமெட்ரிக் கருவியில் பதிவு செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகையை உறுதிசெய்யபயோமெட்ரிக் முறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்காக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத  பணியாளர்கள் வருகைப்பதிவு, பயோமெட்ரிக் கருவியில் பதிவேற்றம் செய்வதற்கான கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 468 பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் 8,032 பேரின் விவரங்களை  பயோமெட்ரிக் கருவிகளில் பதிவேற்றம்செய்யும் பணிகள் நடந்தது.

பள்ளி வேலை நாட்களில் காலை 9.30 மணி, மாலையில் பள்ளி முடியும் நேரத்திலும் ஆசிரியர்கள் தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்வது அவசியம். அதேபோல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலக பணியாளர்கள், வட்டார கல்வி  அலுவலகம், வட்டார மைய கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் கடந்த 3ம் தேதி திறக்கப்பட்டது.

ஒரே நேரத்தில்  பயோமெட்ரிக் கருவியில் வருகைப்பதிவு செய்ய காலதாமதம் ஏற்படுகிறது என்பதால், வருகைப்பதிவு செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, காலை 9.30 மணிக்கு பதிலாக 9.35 மணிக்குள் ஆசிரியர்கள் வருகைப்பதிவு செய்ய வேண்டும். மாலை 4.30 மணிக்கு பதிலாக மாலை 4.35 மணிக்கு பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலகம், வட்டார மைய கல்வி அலுவலகங்களில் ஆசிரியரல்லாத பணியாளர்கள் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here