சென்னை: அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கௌரவக் குறைச்சலா? என்று இடைநிலை ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிகளில் நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி இந்த கேள்வியை எழுப்பினார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சமீபகாலமாக அரசின் முடிவுகளை எதிர்த்து ஆசிரியர்கள் வழக்குத் தொடர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்றும் நீதிபதி பார்த்திபன் குறிப்பிட்டார்.
மேலும், அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கௌரவக் குறைச்சலா?

என்று வழக்குத் தொடர்ந்த பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் கேள்வி எழுப்பினார்.
மழலையர் வகுப்பு எடுக்கும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட எந்த பலன்களிலும் மாற்றமில்லை என்று அரசு தெரிவித்திருந்தது.
இதைக் கேட்ட நீதிபதி, அங்கன்வாடி மையங்களில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் அங்கு பணியாற்ற உத்தரவிட்டார்.
மேலும், அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடங்கியிருக்கும் பள்ளிக்கல்வித் துறைக்கு நீதிபதி தனது பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.