தமிழக உள்ளாட்சி தேர்தல் டிச.,27 மற்றும் டிச.,30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படும் எனதமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் டிச.,13 ம் தேதிக்குள் தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் கமிஷனர் பழனிசாமி தேர்தல் தேதியை வெளியிட்டார். தேர்தல் நாளன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிராம உள்ளாட்சித் தேர்தல் வழக்கம்போல் வாக்குசீட்டு முறையில் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல்கட்ட தேர்தலில் 33,698 வாக்கு இயந்திரம், 2ம் கட்ட தேர்தலில் 32, 092 இயந்திரம் பயன்படுத்தப்படும்.


உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறும்: மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 6-ம் தேதி தொடங்கும். வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்: டிசம்பர் 13, திரும்ப பெற டிசம்பர் 18 கடைசி நாள் எனவும் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்; மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.