தமிழகத்தில் முதல் முறையாக முதுநிலை ஆசிரியர் தேர்வு கணினி வழியில் நடத்தப்படுவது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜி.லதா விளக்கமளித்துள்ளார்.
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வரும் 27 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இந்தத் தேர்வை 1.85 லட்சம் பேர் எழுத உள்ளனர்.
இதற்கிடையே, முதுநிலை ஆசிரியர் தேர்வு முதல்முறையாக கணினி வழியில் (ஆன்லைன்) நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இது தொடர்பாக ஆசிரியர் வாரியத்தின் தலைவர் ஜி.லதா, சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
முதுநிலை ஆசிரியர் தேர்வை 1 லட்சத்து 22 ஆயிரத்து 80 பெண்கள், 8 திருநங்கைகள் உள்பட மொத்தம் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் எழுத உள்ளனர். மொத்தம் 17 பாடங்களுக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் கணினிவழியில் தேர்வு நடைபெற உள்ளது. கணினிவழித் தேர்வு மிகவும் பாதுகாப்பானது. தேர்வு முடிவுகளை உடனே வெளியிட முடியும்.
கண்காணிப்புக் கேமராக்கள்: இந்த தேர்வை முறைகேடின்றி நடத்த அதிகாரிகள் அடங்கிய மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவை துறை இயக்குநர்கள் கண்காணிப்பர். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க, அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், இந்தத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பில்லை. எனவே, தேர்வர்கள் தயக்கமின்றி தேர்வு எழுதலாம்.
இதுதவிர, தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும். தேர்வர்கள் பெருவிரல் கைரேகை வைத்த பிறகு தான் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். மேலும், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் உள்ள விதிமுறைகளை தேர்வர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பெண்கள் ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்து வரக்கூடாது. ஆண்கள் அரைக்கை சட்டை அணிந்து வருவது நல்லது. செல்லிடப்பேசி உட்பட மின் சாதனங்கள் கொண்டுவர அனுமதியில்லை.
தேர்வு முடிவு எப்போது?: இந்தத் தேர்வு முடிவுகளை, நவம்பர் 2-வது வாரத்துக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், பாலிடெக்னிக் விரிவுரையாளர் மறுதேர்வு மற்றும் உதவி பேராசிரியர்கள் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றார் அவர்.
வெளி மாவட்டங்களில் தேர்வு மையம் ஏன்?
தேர்வு மையங்கள் வெவ்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டது குறித்து டிஆர்பி தலைவர் ஜி.லதா செய்தியாளர்களிடம் கூறியது: முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே கடைசியாக ஒதுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே தேர்வு மையங்கள் வேறு வேறு மாவட்டங்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அவர்களில்கூட நியாயமான காரணங்கள் இருந்தால் கர்ப்பிணி பெண்கள், உடல் ஊனமுற்றவர்கள் போன்ற நியாயமான காரணங்கள் இருப்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் தேர்வு மையங்கள் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் தேர்வு மையங்களில் எண்ணிக்கையை அதிகரித்து இதுபோன்று தேர்வு மைய சிக்கல்கள் இல்லாமல் நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு மையம் திட்டமிட்டுள்ளது என்றார்.


Join Telegram Group Link -Click Here