மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் பாராளுமன்றத்திற்கான மாணவர் தலைவர் தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை உ.அமுதா தலைமை தேர்தல் வாக்குப்பதிவு அலுவலராகச் செயல்பட்டார். தேர்தல் விதிமுறைகள் மற்றும் வாக்களிக்கும் வழிமுறைகள் குறித்து பட்டதாரி ஆசிரியர் முனைவர் மணி கணேசன் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். தேர்தல் அலுவலர்களாக ஆசிரியர்கள் அர்ச்சுணன், மோகன், அருள், செந்தில்நாதன் ஆகியோர் செயல்பட்டனர். பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியரும் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மாணவிகள் சு.கீர்த்திகா, ச.மணிமேகலை, கி.வினோதா ஆகியோரில் அதிக வாக்குகள் பெற்று மாணவர் தலைவராக கி. வினோதா வெற்றி பெற்றதற்கு அனைவரும் வாழ்த்துக் கூறினர். அதன்பின் நடைபெற்ற மாணவர் துணைத்தலைவர், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, உணவு, குடிநீர், விளையாட்டு, உள்துறை ஆகிய துறைகளுக்கான அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் தேர்வு நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியை நூர்ஜஹான் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மாணவர் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட அனைத்து மாணவ அமைச்சர்களும் வாக்களித்த சக மாணவ, மாணவிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். பள்ளி வளர்ச்சி, மாணவர்கள் முன்னேற்றம், சமுதாய மேம்பாடு ஆகியவற்றிற்காக ஆசிரியர்களுடன் இணைந்து பாடுபட போவதாக வெற்றி பெற்றோர் உறுதி எடுத்துக் கொண்டனர்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here