தமிழகத்தில் அரசு நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அக்டோபர் 3-ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமல்படுத்தப்பட உள்ளது.


தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு கடந்த ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசு, அரசு உதவி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது. தற்போது அரசு, அரசு உதவி நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. இதையடுத்து, காலாண்டுத் தேர்வுகள் முடிந்து அக்டோபர் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்போது பயாமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமலுக்கு வர உள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்போது சுமார் 6,800-க்கும் அதிகமான அரசு, அரசு உதவி நடுநிலைப்பள்ளிகளில் ஆதார் எண் இணைந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறையில் இருக்கும். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கு 12 இலக்க ஆதார் எண்ணில் கடைசி 8 எண்கள் அடையாளமாக வழங்கப்படும். அந்த எண் மற்றும் கைரேகையை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்போது பயோமெட்ரிக் கருவியில் பதிவு செய்ய வேண்டும்.
அதன்பின் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு முதல் பதிவு வருகையாகவும், கடைசி பதிவு முடிவாகவும் எடுத்துக் கொள்ளப்படும். நவம்பர் மாதத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கும் பயோமெட்ரிக் முறை அமலுக்கு கொண்டு வரப்படும்என்றனர்.



Join Telegram Group Link -Click Here