தொண்ணூறுகள் மற்றும் இரண்டாயிரத்தின் தொடக்க காலத்தில் , பள்ளிக் கல்வியை நிறைவு செய்தவர்கள் நம்மில் பலர் இருப்போம். நம்மில் எவருக்கேனும், ஆசிரியர்களிடம் அடியே வாங்காது, படிப்பை முடித்ததாய் நினைவிருக்கிறதா? பெரும்பாலும், இல்லை என்பதே பதிலாய் இருக்கும். ஒவ்வொரு வகுப்பறையிலும் இதற்கென பிரத்யேகமாக பிரம்போ, அடி ஸ்கேலோ, ஏதேனும் ஒன்று இருக்கும்.

வீட்டுப்பாடம் செய்யாமல் அடி வாங்கியது, தேர்வில் தேர்ச்சி பெறாமல் அடி வாங்கியது, வகுப்பறையில் கவனியாமல், பேசிக்கொண்டு இருந்ததற்காக அடி வாங்கியது என்று எவ்வளவு அடி வாங்கி இருப்போம். நாமும் அதை பெரும்பாலும், பெரிதுபடுத்தி பெற்றோரிடம் சொன்னதுமில்லை. அப்படியே சொன்னாலும், நாம் செய்த தவறு என்ன என்று, நம்மிடம் பெற்றோர் கேள்வியெழுப்பிய காலமது. "அடியாத மாடு படியாது" என்று பிள்ளைகளை பெற்றோர் சமாதானப்படுத்துவர்.

இப்போதோ, தண்டனை கொடுத்த ஆசிரியருக்கு, பணியிடை நீக்கம், அதிகப்படியாக, தனியார் பள்ளி ஆசிரியரெனின், பணிநீக்கம். இதற்கும் மேலாக, வகுப்பறையில் வைத்தே ஆசிரியர் கொலை வரை பார்த்தது, அதற்குள்ளாக நாம் எல்லாம் மறந்து போயிருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்.இளைய சமுதாயம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? ஏன் இந்த மாற்றம்?

நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என்ற எண்ணம், தோல்வி என்ற ஒன்றை தாங்கிக் கொள்ள இயலாமை அல்லது பழக்கப்படுத்தாமை, ஆசிரியப் பெருமக்களை குழந்தைகள் முன்னிலையிலேயே தாழ்த்திப் பேசுதல், வகுப்பில் படிக்காவிட்டாலும், தனிவகுப்பு(tution) மூலம் படித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை மனத்தில் விதைத்தல், இவையெல்லாம் காரணமாகக் கொள்ளலாம்.

ஆனால், ஒவ்வொரு ஆசிரியருக்கும், மனத்துள் ஓடும் எண்ணமும் முயற்சியும் என்ன தெரியுமா?


மாணவர்களுக்கு எப்படி கற்றுக் கொடுத்தால் புரிந்து கொள்வார்கள் என்பதை கண்டு, ஆராய்ந்து, பாடத்தை எளிமைப்படுத்தி கற்பித்தலுக்கு பலவகை உபகரணங்கள், வரைபடங்கள், கணினி இவற்றின் உதவி கொண்டு, தன்னையும், அண்மைக்கால கல்வி, தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்திக் கொண்டு, மாணவர்களையும் மேம்படுத்துகிறார்கள்.இதுமட்டுமல்லாது, பாடத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, கூடுதல் பயிற்சி கொடுத்து, உற்சாகமூட்டி, தேர்ச்சி பெறச் செய்யும் ஆசிரியர்கள், தம் பணியை தொழிலாக பார்ப்பதில்லை. தவமாக எண்ணியே வாழ்கிறார்கள்.

கல்லூரிப் பாடங்கள் பெரும்பாலும், தலையும் புரியாது, வாலும் புரியாது, எதைக் கொண்டு குறிப்பெடுத்து, எப்படி படிப்பது என்று பெரும் குழப்பமாக இருக்கும். குறிப்பு புத்தகங்கள் (Reference books) என்று பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை, பிரித்து படித்துப் பார்க்கவே நெடுங்காலம் எடுக்கும். அது போன்ற சந்தர்ப்பங்களில், நமக்கு கைகொடுப்பவர் நம் விரிவுரையாளர்களே. தான் எடுத்த குறிப்புகளை கொடுத்து, நமது தேடல் வேலையை எளிமையாக்கி விடுவார்கள்.

நமக்கு முன்னால் படித்த மூத்த மாணவர்கள் நமக்கு செய்யும் உதவியும் கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். தான் குறிப்பெடுத்து படித்த புத்தகங்கள், குறிப்புகள் என அனைத்தையும் நமக்கு கொடுத்து உதவுவார்கள்.எது மிகவும் முக்கியமான கேள்வி, எப்படி படித்தால் நல்ல மதிப்பெண் பெறலாம் என நமக்கு அறிவுரையும், ஊக்கமும் வழங்குவார்கள்.

பாடம் கற்றுக் கொடுப்பது மட்டுமே தன் பணி என்று, அத்தோடு நின்று விடுவதில்லை சில ஆசிரியப் பெருமக்கள். பசியால் வாடும் மாணாக்கருக்கு தன் சொந்த செலவில் உணவு வாங்கி வழங்குகிறார்கள், தன் நகையை அடகு வைத்து, வரைப்பட்டிகை வாங்கி, வகுப்பறையில் பாடம் கற்பிப்பதோடு, வகுப்பறையையும் SMART வகுப்பறையாக மாற்றி கற்பித்து வருகிறார் ஓர் ஆசிரியை, இப்படி எத்தனையோ ஆசிரியர்கள் தன்னலம் பாராது, மாணவர்களின் கல்வியும், அவர்களது வாழ்வுமே முதன்மையாகக் கருதி, செயல்படும் ஆசிரியர்களால் தான், இன்றும் ஆசிரியப் பணி தெய்வப் பணிக்கு நிகராக போற்றப்படுகிறது.

ஆசிரியப் பணி அறப் பணி அதற்கு தன்னையே அர்ப்பணித்திருக்கும் ஆசிரியர்களை பேணினால், எதிர்வரும் சந்ததியும், நாடும் நலமாய் இருக்கும்.






Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here