சென்னை, புத்தகமும் இல்லாமல், வகுப்பும் எடுக்காமல், உடற்கல்வி பாடத்துக்கு காலாண்டு தேர்வு நடந்துள்ளது. கேள்வித்தாளில் இருந்த பிழைகளால், மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நேற்று முன்தினம், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் உடற்கல்வி தேர்வு நடத்தப்பட்டது. இந்த இரண்டு பாடங்களுக்கும், மாணவர்களுக்கு இதுவரை, புத்தகங்கள் வழங்கப்படவில்லை; வகுப்புகளும் நடத்தப்படவில்லை. ஆனால், வினாத்தாளுடன் தேர்வு நடந்தது. 'தேர்வில், உங்களுக்கு தெரிந்த எதையாவது எழுதுங்கள்' என, மாணவர்களிடம் கூறப்பட்டுள்ளது. அதனால், தேர்வை எழுதிய மாணவர்களும் அவர்களின் பெற்றோரும், புத்தகமின்றி, பாடமின்றி, வகுப்பின்றி ஒரு தேர்வா என, ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தனர். அதுமட்டுமின்றி, கேள்வித்தாளில் அடுக்கடுக்காக பிழைகளும் இருந்துள்ளது, இந்த தேர்வுக்கு இன்னும் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. ஆறாம் வகுப்பு உடற்கல்வி கேள்வித்தாளில், 2018ம் ஆண்டுக்கானது என, தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.எட்டாம் வகுப்பு ஆங்கில வழி கேள்வித்தாளில், மாரத்தான் என்ற வார்த்தையும், ஆறாம் வகுப்பு ஆங்கில வழி கேள்வித்தாளில், நான்கு வார்த்தைகளும், எழுத்து பிழைகளுடன் இருந்தன. மேலும், உடற்கல்வி குறித்த பாடத்தில், மழைநீர் சேகரிப்பு குறித்த கேள்வி இருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல, தமிழ் மொழி பெயர்ப்பும், மாணவர்களுக்கு புரியாத வகையில் இருந்தது. இந்த பிரச்னைகளை சரிசெய்து, முறைப்படி புத்தகம் வழங்கி, பாடம் நடத்தி, தவறில்லாத வினாத்தாள் வழியாக தேர்வை நடத்த வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Join Telegram Group Link -Click Here