இனி ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்க்கு கால் பேச பணம் வசூலிக்கப்படும்.

ஜியோவின் ஸ்பெஷல் IUC top-up voucher எதற்காக..? என்ன பலன்..?

கடந்த செப்டம்பர் 05, 2016 அன்று முறையாக இந்திய டெலிகாம் சந்தையில் நுழைந்தது ஜியோ. உள்ளே வந்து கடை விரித்த மூன்றே வருடங்களில் இந்தியாவின் 30 சதவிகித டெலிகாம் சந்தையை வளைத்துப் போட்டு பல டெலிகாம் நிறுவனங்களுக்கும் சிம்ம சொப்பமனாக இருக்கிறது.

அப்படிப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே இப்போது ஐயூசி கட்டணம் என்கிற சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறது.

இந்த ஐயூசி கட்டண சிக்கலால். இனி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தன் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு நிமிடத்துக்கு ஆறு பைசா வசூலிக்கத் தொடங்கிவிட்டார்கள். சரி இந்த ஐயூசி கட்டணம் என்றால் என்ன..?

தீபாவளி அணு குண்டு போட்ட ஜியோ! ஜியோ யூசர்கள் இனி இவர்களுக்கு கால் செய்தால் கட்டணம் செலுத்தணும்!

முதலில் ஐயூசி கட்டணம்
இதை ஒரு உதாரணத்துடன் தொடங்குவோம் ஜியோ நெட்வொர்க்கில் இருந்து ஏர்டெல் நெட்வொர்க்குக்கு ஒருவர் கால் செய்கிறார் என்றால், இப்போது ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தில், காலை கனெக்ட் செய்து கொள்ள, ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். இதை ஆங்கிலத்தில் Interconnect Usage Charge என்பார்கள். இது எல்லா நெட்வொர்க்குக்கும் பொருந்தும். இந்த ஐயூசி கட்டணம் தான் இப்போது ஜியோவும் தன் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப் போகிறார்கள். இந்த வசூல் திட்டம் இன்றில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது.

யாருக்கு எல்லாம் கட்டணம்

ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்ட அறிக்கையில், இனி ஜியோ வாடிக்கையாளர்கள், வேறு நெட்வொர்க்குகளில் உள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளும் போது, ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இப்படி ஒரு நெட்வொர்க்கில் இருந்து இன்னொரு நெட்வொர்க்குக்கு கால் செய்யும் போது, முறையாக ஐயூசி கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்கிற விதி மாற்றப்படும் வரை இனி ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த 6 பைசா கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

யாருடன் பேசினால் கிடையாது
ஜியோ நெட்வொர்க்கில் இருக்கும் வாடிக்கையாளர், தங்கள் நெவொர்க்குக்கு உள்ளேயே ஜியோ ஃபோன், ஜியோ லேண்ட் லைன் போன்றவைகளைப் பயன்படுத்தினால் இந்த ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என்கிற கட்டணம் வசூலிக்கப்படாதாம். அதே போல ஆன்லைன் கால் வசதிகளான ஃபேஸ் டைம், வாட்ஸப் கால், கூகுள் அலோ போன்றவை களைப் பயன்படுத்தி பேசினாலும், இந்த ஐயூசி கட்டணம் வசூலிக்கப்படாது எனச் சொல்லி இருக்கிறார்கள்.

வாடிக்கையாளர் வருத்தம்
இப்படி திடீரென ஒரு நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கத் தொடங்கினால், வாடிக்கையாளர்களின் கோபத்துக்கு ஆள் ஆகிவிடக் கூடாது என ஜியோ ஒரு அருமையான யோசனையைக் கொண்டு வந்து இருக்கிறது. தற்போது ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என வசூலிக்கும் பணத்துக்கு இணையாக கூடுதல் டேட்டாவை, இலவசமாக வழங்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சொன்ன படியே தற்போது ஒரு ரீசார்ஜ் திட்டத்தையும் அறிவித்துவிட்டது.

ரீசார்ஜ் திட்டம்
10 ரூபாய்க்கான ஜியோவின் IUC top-up voucher-ஐ ரீசார்ஜ் செய்தால், 1 ஜிபி டேட்டா மற்றும் 124 ஐயூசி நிமிடங்கள் இலவசம்.

20 ரூபாய்க்கான ஜியோவின் IUC top-up voucher-ஐ ரீசார்ஜ் செய்தால் 2 ஜிபி டேட்டா மற்றும் 249 ஐயூசி நிமிடங்கள் இலவசம்.

50 ரூபாய்க்கான ஜியோவின் IUC top-up voucher-ஐ ரீசார்ஜ் செய்தால் 5 ஜிபி டேட்டா மற்றும் 656 ஐயூசி நிமிடங்கள் இலவசம்.

100 ரூபாய்க்கான ஜியோவின் IUC top-up voucher-ஐ ரீசார்ஜ் செய்தால் 10 ஜிபி டேட்டா மற்றும் 1,362 ஐயூசி நிமிடங்கள் இலவசம்.

என திட்டங்களை இன்றே அறிவித்து அதகளப் படுத்தி இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ..!

ஏன் திடீர் கட்டணம்

ரிலையன்ஸ் ஜியோ கம்பெனி, கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 13,500 கோடி ரூபாயை, இந்த ஐயூசி கட்டணங்களாக பார்தி ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா போன்ற போட்டி நிறுவனங்களுக்கு கட்டணமாகச் செலுத்தி இருக்கிறார்கள். தற்போது, இந்த இழப்பை சரி கட்டத் தான் இப்போது தன் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என கட்டணம் வசூலிக்க இருக்கிறார்களாம். 3 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக ஜியோ வாடிக்கையாளர்கள் வாய்ஸ் காலுக்கு கட்டணம் செலுத்தப் போகிறார்கள். அனேகமாக செலுத்திக் கொண்டு இருப்பார்கள்.

Join Telegram Group Link -Click Here