அரசுப் பள்ளி மாணவி அர்ச்சனா, பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக பயோ பிளாஸ்டிக் எனப்படும் உயிரி நெகிழியைக் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார். பை மற்றும் எந்த வடிவில் வேண்டுமானாலும் இதைக் கொண்டு பொருள்கள் தயாரிக்கலாம். "28 நாள்களில் மக்கி உரமாகிவிடுவதுடன் மண்ணுக்கும் மனிதனுக்கும் எந்தக் கேடையும் ஏற்படுத்தாது" என்று கூறும் மாணவி, தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கையையும் முன் வைக்கிறார்.
பாட்டியுடன் அர்ச்சனா
தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார் அர்ச்சனா. அப்பா இறந்துவிட்ட நிலையில், அம்மா விவசாய கூலி வேலை செய்து அர்ச்சனாவைப் படிக்க வைக்கிறார். அர்ச்சனா எப்போதும் கண்டுபிடிப்புகள்மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். இந்த நிலையில், பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி அர்ச்சனா படிக்கும் பள்ளியில் நடைபெற்றது. அதில் வைக்கப்பட்ட போட்டியில், பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக எளிதில் மக்கக்கூடிய பயோ பிளாஸ்டிக் எனப்படும் உயிரி நெகிழியைக் கண்டுபிடித்துள்ளார் அர்ச்சனா. அதில் சில பொருள்களைத் தயாரித்து காட்டி அசத்தியதுடன், இதன் நன்மைகள் குறித்தும் தெளிவான செய்திகளை விவரித்திருக்கிறார். அர்ச்சனாவுக்கே இப்போட்டியில், முதல் பரிசு கிடைத்தது.
ஜெல்சி ரூபா என்ற ஆசிரியை தொடர்ந்து அர்ச்சனாவை ஊக்கப்படுத்தி, வழிகாட்டுபவர். இதையடுத்து கரூர் மாவட்டத்தில் மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி போட்டியில் கலந்துகொண்டு உயிரி நெகிழியைத் தயார் செய்து காட்டினார். பிளாஸ்டிக்கின் தீமையை அறிந்த அனைவரும் இவரின் முயற்சியை, வரவேற்று பாராட்டினர். மாநில அளவிலும் முதல் பரிசை வென்றார் அர்ச்சனா.
ஆசிரியருடன் அர்ச்சனா
வெற்றியுடன் பள்ளிக்குத் திரும்பிய அர்ச்சனா, பாராட்டு விழாவோடு காத்திருந்தனர் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர். அதில், கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு அர்ச்சனாவைப் பாராட்டி உற்சாகப்படுத்தினர். எல்லோருக்கும் நன்றி தெரிவித்த அர்ச்சனா, "பிளாஸ்டிக்ககால் மண், அதன் வளத்தை வேகமாக இழந்துகொண்டிருக்கிறது. என்னுடைய இந்தக் கண்டுபிடிப்பு அரசின் கவனத்துக்குச் செல்ல வேண்டும். பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்றாக, உயிரி நெகிழியைத் தயார் செய்து அனைவரும் பயன்படுத்தகூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.
மாணவி அர்ச்சனாவிடம் பேசினோம். "பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது என்பது எல்லோருடைய வாழ்கையிலும் இயல்பான ஒன்றாகிவிட்டது. குடிக்கிற டீ தொடங்கி, சாப்பிடுகிற சாப்பாடு வரை எதை வாங்க சென்றாலும் அவை கேரி பேக் எனப்படும் பிளாஸ்டிக் பொருளைதான் பயன்படுத்துகிறோம். இதிலுள்ள ரசாயனம் உடலில் பலவித நோய்கள் வருவதற்கு வழிவகுக்கிறது என்று கூறுகிறார்கள்.
செயல்முறை
இவற்றை அப்படியே வீசி விடுவதால், மக்காமல் மண்ணுக்குள் புதைந்துவிடுகின்றன. இதனால், மண்வளம் கெட்டுப்போவதுடன் நிலத்தடி நீர் மட்டமும் குறைகிறது. இவற்றைத் தீயிட்டு எரித்தால் அதிலிருந்து வெளியேறும் நச்சுக்சுற்று சூழலை மாசடைய வைக்கிறது. வெட்ட வெளியில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது.
மண்ணுக்கும் மனிதனுக்கும் விலங்குகளும் பறவைகளுக்கும் பல்வேறு கேடுகளை விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பட்டுக்கு அரசு தடை விதித்தாலும்கூட, அவற்றை முற்றிலுமாக அழிக்க முடியவில்லை. மேலும், அவை நம்மைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இவற்றிலிருந்து முழுவதுமாக விடுபட வேண்டும் இவற்றிற்கு மாற்றாக ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என, என் மனதில் ஆழமான விதை விழுந்தது. இதைத் தொடர்ந்து பள்ளி அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் ஆசிரியர்கள் வழிகாட்டுதலோடு சோளமாவு, கிளசரின் எனப்படும் தாவர எண்ணெய், வினிகர் அசிட்டிக் ஆசிட் ஆகியவற்றைக் கொண்டு, பயோபிளாஸ்டிக் எனப்படும் உயிரி நெகிழியைத் தயார் செய்து காண்பித்தேன்.
உயிரி நெகிழி
இந்தப் பொருள்களுடன் தண்ணீரை சேர்த்து பிசைந்து அவற்றை சூடாக்க வேண்டும். குமிழ் வரும் அளவுக்கு பதமாகச் சூடேறிய பிறகு, நாம் வேண்டிய வடிவத்தில் அதற்குரிய அமைப்பில் இவற்றை ஊற்றினால் உயிரி நெகிழி ரெடியாகிவிடும். இவற்றை பிளாஸ்டிக் பைகளாகவோ, தட்டு, ஸ்பூன் மற்றும் எந்த வடிவிலான பாத்திரங்கள் தேவையோ அதற்கேற்றாற்போல் வடிவமைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திய பிறகு விட்டெறிந்தால், 28 நாளில் இவை மண்ணுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படுத்தாமல் மக்கி மண்ணுக்கு உரமாகவிடும்.
தீயிட்டு எரித்தால்கூட எந்த விதமான நச்சும் வெளியேறாது. இதைச் செய்து காண்பித்து மாநில அளவில் முதலிடம் பெற்றேன். அடுத்து தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டு இதைச் செய்து காட்டவிருக்கிறேன். என் முயற்சிக்கு முழுக் காரணம் ஜெல்சி ரூபா மேடம் மற்றும் ஆசிரியர்கள்தாம்.
உயிரி நெகிழி
என் கண்டுபிடிப்பு முதல்வரின் கவனத்துக்குச் செல்ல வேண்டும். அவர் இதை ஊக்குவித்து அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக நம் தமிழ்நாடு மாறி, இந்தியாவுக்கு முன்னுதாரமாகத் திகழ வேண்டும் என்பதே என் ஆசை" என்றார் அர்ச்சனா.

Join Telegram Group Link -Click Here