இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பள்ளி குழந்தைகளுக்கென சிறப்பு பயிற்சி முகாம் ஒன்றை நடத்தவுள்ளது .`YUva VIgyani KAryakram' என்ற பெயரில் போன வருடத்திலிருந்து இந்தப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இரண்டாவது முறையாக இந்தப் பயிற்சி முகாம் மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அதன் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே. இந்தியாவின் எதிர்கால விண்வெளி ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் வகையில் இது திட்டமிடப்பட்டுள்ளது.
ISRO இஸ்ரோ
இப்பயிற்சி முகாம் கோடை விடுமுறையில் மே 11-ம் தேதி முதல் மே 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கு ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் தலா மூன்று பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் ஸ்டேட் போர்டு ஆகிய அனைத்துப் பள்ளி மாணவர்களும் அடங்குவர். இவற்றுடன் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென ஐந்து கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான தேர்வு இணையதளம் மூலமே நடைபெறும். இதற்கான விண்ணப்பம் பிப்ரவரி 3-ம் தேதி முதல் பிப்ரவரி 24-ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். இந்த வருடம் எட்டாம் வகுப்பு முடித்து அடுத்த வருடம் ஒன்பதாம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். இந்த நிகழ்ச்சிக்கான தேர்வானது எட்டாம் வகுப்பின் கல்வித் திறன் மற்றும் இதர செயல்திறன் அடிப்படையாகக் கொண்டு நடைபெறும்.
ISRO
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இஸ்ரோவின் அதிகாரபூர்வ இணையதளமான www.isro.gov.in சென்று விண்ணப்பிக்கலாம். இதில் முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டோரின் பெயர்கள் மார்ச் 2 , 2020 அன்று வெளியிடப்படும். இதற்குத் தேவையான எல்லா சான்றிதழ்களையும் மார்ச் 23-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் இறுதி தேர்வுப்பட்டியல் மார்ச் 30 அன்று வெளியிடப்படும். இதில் தேர்வாகும் மாணவர்கள் அகமதாபாத், திருவனந்தபுரம், சில்லோங்க், பெங்களூர் ஆகிய நான்கு இஸ்ரோ மையங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்யலாம். இதில் தேர்வாகும் மாணவர்களின் பயணச் செலவு, தங்கும் செலவு, உணவு செலவு ஆகியவற்றை இஸ்ரோ நிறுவனமே பார்த்துக்கொள்ளும். இவர்களுடன் வரும் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்குப் பயணச் செலவு (இரண்டாம் வகுப்பு ஏசி வரை) வழங்கப்படும். மேலும், கூடுதல் தகவல்களுக்கு yuvika2020@isro.gov.in என்ற ஈ-மெயிலை தொடர்புகொள்ளுங்கள்.


Join Telegram& Whats App Group Link -Click Here