புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் 
மேற்பனைக்காடு ஊராட்சியில்
இன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொள்பவர்களில் கடைசிவரை இருப்பவர்களில் இருந்து குலுக்கலில் 10 நபர்களுக்கு பரிசுகளும், 
சிறந்த ஆலோசனைகள் தருபவர்களில் இருந்து 3 நபர்களுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்படும் என்ற அறிவிப்பை விளம்பரம் மூலமாகவும், துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும் வழங்கி கிராமசபைக் கூட்டத்தை நடத்தியது மேற்பனைக்காடு ஊராட்சி மன்றம்.

புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு நடைபெறும் முதல்கூட்டம் என்பதாலும், வித்தியாசமான அறிவிப்பினாலும் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு அசத்தினர்.

கூட்டமானது ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளாவிஜயன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு பார்வையாளராக துணை வளர்ச்சி அலுவலர் வணங்காமுடி கலந்துகொண்டார். ஊராட்சிமன்ற உறுப்பினர்களில் தொடங்கி பொதுமக்கள் வரைக்கும் அனைவருக்கும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கூற வாய்ப்பு வழங்கப்பட்டது.
சிறந்த கருத்துக்களைத் தேர்வு செய்ய அழைக்கப்பட்டிருந்த ஆசிரியர் ரோட்டரியன் சதிஷ்குமார் , 
படித்த இளைஞர்களுக்கு
போட்டித்தேர்வு மையம் அமைத்தல்,
மதநல்லிணக்க குழுவை ஏற்படுத்தல், 
ஊராட்சி மன்றம் சார்பில் விவசாயிகளுக்கான வாரச்சந்தை ஏற்படுத்தல், மது ஒழிப்பு விழிப்புணர்வு குழுவை ஏற்படுத்தல் என்னும் ஆலோசனைகளை வழங்கியவர்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கினார்.

கூட்டத்தின் முடிவில் ஊராட்சி செயலாளர் விஜய் நன்றி கூறினார்.