கடந்த ஆண்டுகளைப் போன்று நிகழாண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழக பள்ளிகளில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் தங்கள் கல்வித் தகுதிகளை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்து, அடையாள அட்டை பெற ஏற்பாடு செய்யப்பட்டது. அதுபோன்று 2017-ஆம் ஆண்டுவரை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வித் தகுதிகளை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவுகள் செய்யப்பட்டன. இதனால் பதிவுதாரர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி தாங்கள் கல்வி பயின்ற பள்ளிகள் மூலமாகவே பதிவு செய்து கொண்ட காரணத்தால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.
எனவே கடந்த ஆண்டுகளைப் போன்று இந்த ஆண்டும் அந்தந்தப் பள்ளிகளிலேயே பதிவு மேற்கொள்ளப்படுகிறது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் நிரந்தர சான்றிதழ் வழங்கும் நாளிலிருந்து 15 நாள்களுக்கு அந்தந்தப் பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளவும், அந்தந்த தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்ட நாளே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஆண்டு (2018) வழங்கிய அதே படிவங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here