தற்பொழுது எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பும் மாணவர்களை மட்டும்தான் நீட் தேர்வு மிரள வைத்துக்கொண்டிருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் பி.ஏ., பி.எஸ்.எஸ்.சி உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இனி கோச்சிங் செண்டர்களின் ஆட்சிதான் இங்கு நடக்கப் போகிறது என கொந்தளிக்கிறார் சமூக ஆர்வலரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தகைமைச் செயற்குழு உறுப்பினர் அருணபாரதி. இதன் மூலம் கோச்சிங் செண்டர்கள் மக்கள் பணத்தை கோடி கோடியாக கொள்ளையடிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து நம்மிடம் விரிவாக பேசிய அருணபாரதி "மருத்துவப் படிப்பில் சேர, இந்த ஆண்டு இந்தியா முழுவதும் 14 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் கோச்சிங் செண்டர்களில் பயின்றவர்கள். இதில் 7 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் வெற்றிப் பெற்றார்கள். ஆனால் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ படிப்புக்கான மொத்த இடங்கள் 65 ஆயிரம் தான் உள்ளன. ரேங்க் அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன. மீதி மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடுகிறது. கோச்சிங் செண்டரில் ஒரு மாணவருக்கு 3 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

10 லட்சத்திற்கு அதிகமான மாணவர்களின் மூலம் கோச்சிங் செண்டர்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் பார்த்துவிடுகின்றன. ஓரளவுக்கு பண வசதியுள்ள மாணவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு கோச்சிங் செண்டர்களில் பயில்கிறார்கள். இந்த ஆண்டு நீட் தேர்வில் பெற்ற மாணவர்கள் சிலரை, டில்லியில் உள்ள இரண்டு கோச்சிங் செண்டர்கள் சொந்தம் கொண்டாடி விளம்பரப்படுத்தியுள்ளன. கோச்சிங் செண்டர்களிடமிருந்து சில ருக்கு நண்கொடைகள் செல்கின்றன.
இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் எதற்காக நீட் தேர்வுகொண்டு வரப்பட்டது என. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் பாலிடெக்னிக், பி.ஏ., பி.எஸ்.எஸ்.சி உள்ளிட்ட அனைத்து படிப்புளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என சொல்லப்பட்டுள்ளது. இது மாணவர்களின் எதிர்காலத்தை இருட்டுக்குள் தள்ளுவதாகும். கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பெரும் தொகையை செலவு செய்து, கோச்சிங் செண்டர்களில் பயின்றால்தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும். இனி ஊருக்கு ஊர் ஆயிரக்கணக்கான கோச்சிங் செண்டர்கள் உருவெடுக்கும். மக்களின் பணம் கோடி கோடியாக கொள்ளையடிக்கப்படும். நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத மாணவர்களின் எதிர்காலம் பள்ளிப் படிப்போடு பாதியிலேயே நின்று விடும்" என தெரிவித்தார்.


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here