கல்வித்துறை பணி நியமனத்தில் மதுரையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் எம்எல்ஏக்கள், கல்வித்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத துப்புரவுப் பணியாளர்கள், காவலாளிகள் பணிகளுக்கான 5 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த 2012-ஆம் ஆண்டு அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, மதுரை உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 25 துப்பரவுப் பணியாளர்கள், 13 காவலாளிகள் பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டது. காவலாளி பணியிடங்களில் தகுதியானவர்களை நிரப்ப மதுரை மாவட்ட வேலைவாய்ப்புத் துறை 47 பேர் பெயர் பட்டியலை கல்வித்துறைக்கு வழங்கியது.
இதில், தேர்வில் 30 பேர் பங்கேற்ற நிலையில், 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதேபோல, 25 துப்புரவுப் பணியாளர் காலிப் பணியிடங்களுக்கு 116 பேர் பெயர் பட்டியலை வேலைவாய்ப்புத்துறை கல்வித்துறைக்கு வழங்கியது. இந்தத் தேர்வில் 65 பேர் பங்கேற்ற நிலையில், 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் இப் பணிக்கு விண்ணப்பித்திருந்த திருப்பரங்குன்றம் கைலாசபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான கணேசனுக்கு வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து அவர், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எந்த அடிப்படையில் 26 பேர் தேர்வு செய்யப்பட்டனர், மாற்றுத்திறனாளிக்களான இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டதா என்பது குறித்து கேட்டிருந்தார்.
பணிநியமனத்தில் முறைகேடு: இதில், மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீடு தேர்வில் பின்பற்றபடாததும், தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதும் கணேசனுக்கு தெரியவந்தது. இதையடுத்து, தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்து, 10 துப்புரவுப் பணியாளர்கள், 6 காவலாளிகள் பணியிடங்கள் முறைகேடு செய்து, அரசியல்வாதிகள் பரிந்துரையின் அடிப்படையில் நியமிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து நீதிமன்றம், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
9 பேர் மீது வழக்கு: அதன்படி, இந்த முறைகேட்டில் ஈடுபட்ட உசிலம்பட்டி கல்வி மாவட்ட முன்னாள் கல்வி அலுவலர் ஜெ.சாந்தமூர்த்தி உள்ளிட்ட 5 கல்வித்துறை அதிகாரிகள், பார்வர்டு பிளாக் கட்சியின் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ பி.வி.கதிரவன், திருமங்கலம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ எம். முத்துராமலிங்கம், மறைந்த முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.போஸ் ஆகிய 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர், விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.