காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 13,14,15 ஆகிய நாட்களிலும், பக்ரித், சுதந்திர தினம், வார முறைகள் என மொத்தம் 9 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழாவினை முன்னிட்டு பெருமாள் கடந்த ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து 31-ஆம் தேதி வரை சயனக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து பெருமாள் நின்ற கோலத்தில் வரும் 17-ஆம் தேதி மாலை 5 மணி வரை காட்சியளிக்கவுள்ளார். விழாவின் 38-வது நாளான இன்று புதன்கிழமை அத்திவரதப் பெருமாள் நின்ற கோலத்தில் இளஞ்சிவப்பு பட்டு மற்றும் மஞ்சள் நிற அங்கவஸ்திரமும் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அத்திவரதரை தரிசிக்க வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்ததால் கடுமையான கூட்ட நெரிசல் காஞ்சி நகரமே மிதந்து வருகிறது. பொது தரிசனப் பாதையில் 6 மணி நேரத்திற்கு மேலாகவே சுவாமி தரிசனம் செய்ய முடிந்ததாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் அத்திவரதர் பெருவிழா தரிசனம் வரும் 17-ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் மதியம் 12 மணியுடன் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் வழியாக செல்லும் பொது தரிசனப்பாதை அடைக்கப்படும். அதன்பிறகு வரும் பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏற்கெனவே, கோயில் வளாகத்தில் உள்ள பக்தர்கள் மாலை 5 மணி வரையிலும் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் ஆகம விதிகளின்படி அத்திவரதர் குளத்தில் வைக்கப்படுகிறார். 17-ஆம் தேதி முக்கிய பிரமுகர்கள் தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா இறிவித்துள்ளார்.
இதனிடையே, 10, 11, 12-ஆம் தேதிகளில் 3 நாள்கள் விடுமுறை தினங்களாக இருப்பதால் இந்நாட்களில் இதுவரை வந்ததை விட கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் காஞ்சிபுரம் அருகேயுள்ள முத்தியால்பேட்டை, வந்தவாசி, கீழம்பி ஆகிய 3 இடங்களில் சுமார் 35 ஆயிரம் பக்தர்கள் இளைப்பாறும் வகையில் மேற்கூரையுடன் கூடிய பந்தல்கள் அமைக்கப்படும். அங்கு பக்தர்கள் உட்காரவும், உணவு அருந்தவும், கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் தேவையான வசதிகள் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அத்திவரதர் தொடர்பான புத்தகத்தை முதல்வர் வெளியிட்டார். ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
முதல்வரின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிதசனத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13,14,16 ஆகிய நாட்களிலும், பக்ரித், சுதந்திர தினம், வார முறைகள் என மொத்தம் 9 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் வாகனங்களை பள்ளி வளாகங்களில் நிறுத்தவும், பக்தர்கள் ஓய்வெடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் நகர பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.