புதுடில்லி: விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட இருப்பதை அடுத்து கூகுள் நிறுவனம் தனது டூடுலில் அவரை கவுரவித்துள்ளது. இந்திய விண்வெளித்துறையில் முக்கிய பங்காற்றியவர் விக்ரம் சாராபாய்.இவர்குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 1919-ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி பிறந்தார். ஆரம்பகல்வியை குஜராத்தில் முடித்த பின்னர் மேற்கல்விக்காக இங்கிலாந்து சென்றார். 2-ம் உலகப் போர் நடைபெற்ற நேரத்தில் இந்தியா திரும்பிய அவர் பெங்களூருவில் உள்ள இந்தியஅறிவில் மையத்தில் பணியாற்றினார். இந்தியா ராக்கெட் ஏவுவது குறித்து தொடர்ந்து சிந்தித்துவந்துள்ளார். இந்தியாவின் அணு அறிவியல் திட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஹோமி ஜஹாங்கிர் பாபா ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான விக்ரமின் திட்டத்திற்கு ஆதரவு அளித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அடித்தளமிட்டர் விக்ரம்சாராபாய்.இவரது முயற்சியால் இந்தியாவின் முதல் செயற்கை கோள் 1975-ம் ஆண்டு ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்டது. மேலும் அகமதாபாத்தில் இயங்கி வரும் இந்திய மேலாண்மை நிறுவனத்தை உருவாக்கினார். அணு சக்தி ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.இவரது சாதனையை பாராட்டி மத்திய அரசு கடந்த 1966ம் ஆண்டு பத்மபூஷண் விருதும் மறைவுக்கு பிந்தைய விருதாக பத்ம விபூஷண் விருதையும் வழங்கி கவுரவித்துள்ளது.விக்ரம் சாராபாய் நூற்றாண்டை முன்னிட்டு தற்போது இஸ்ரோ நிறுவனம் சந்திரயான்-2 செயற்கை கோளை நிலவுக்கு செலுத்தி உள்ளது.தொடர்ந்து இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது பெயரில் விருது ஒன்றையும் வழங்க உள்ளது.பல்வேறு சாதனைகளை புரிந்த விக்ரம் சாராபாய் 1971 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ம் தேதி திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளத்தில் காலமானார். இவரது மகன் கார்த்திகேயா சாராபாய் உலகின் முன்னணி சுற்றுச்சூழல் கல்வியாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.மனிதனின் மற்றும் சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளுக்கு மேம்பட்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதில் நாம் இரண்டாவதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் என விக்ரம் சாராபாய் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.