ஒரு கால கட்டத்தில் இந்தியாவை கேலி செய்த நாடுகளே இன்று இந்தியாவை புகழ்ந்து பாராட்டும் அளவுக்கு விண்வெளித்துறையில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

சந்திரயான் -1, மங்கள்யான் ஆகியவற்றைத் தொடர்ந்து விண்வெளித் துறையில் இந்தியாவின் அடுத்த முக்கியமான மைல் கல்லாக சந்திரயான் -2 பார்க்கப்பட்டது. இது முழு வெற்றி இல்லையென்றாலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு விண்வெளித்துறையில் சாதனை படைக்க முயற்சித்த நான்காவது நாடு என்ற பெருமையை இஸ்ரோ பெற்றுள்ளது.

சந்திரயான் -1 :

நிலவு குறித்து ஆராய்ச்சி செய்யும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதல் திட்டமான சந்திரயான் -1 கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இதுவரை 30க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை உலக நாடுகள் நிலவுக்கு அனுப்பிய போதிலும், இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -1 மட்டுமே நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது.

சந்திரயான் -1 விண்ணில் செலுத்தப்படுவதற்கு முன்னரே சந்திரயான் -2 திட்டத்திற்கு மத்திய அரசிடம் இஸ்ரோ ஒப்புதல் பெற்றது.

சந்திரயான் -2 - ஓர் பார்வை

சந்திரயான் -2 விண்கலம் முதலில் கடந்த ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணில் செலுத்துவதற்கு 56 நிமிடங்களுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டது.

சந்திராயன் -2 விண்கலத்தின் மொத்த எடை 3,850 கிலோ. இது ஆர்பிட்டர், லேண்டர்-விக்ரம் மற்றும் ரோவர்-ப்ரக்யான் என மூன்று பகுதிகளைக் கொண்டது. ஆர்பிட்டரின் எடை 2,379 கிலோ; ஆயிரம் வாட் மின்திறனை கொண்டது.

லேண்டர் -விக்ரம் எடை 1,471 கிலோ. 650 வாட் மின்திறனை கொண்டது. அடுத்ததாக, ரோவர்- ப்ரக்யான் 27 கிலோ எடையும், 50 வாட் மின்திறனையும் கொண்டுள்ளது. மணிக்கு 6,000 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. சந்திராயன் - 2 விண்கலத்தை உருவாக்க ஆன செலவு ரூ.978 கோடி ஆகும். ஆர்பிட்டரின் ஆயுட்காலம் 1 ஆண்டுகள்.

முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டது. பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலவு உள்ளது. சந்திரயான்-2 ரோவர் சக்கரத்தில் அசோக சக்கரம் மற்றும் இஸ்ரோ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. ரோவர் தரையிறங்கும் போது இந்த முத்திரைகள் நிலவில் பதியும்.

கடந்த ஜூலை 22ம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிக்கோட்டாவின் சத்திஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 3.84 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து நிலவை அடைந்துள்ளது.

இதில் பல்வேறு விதமான லேசர் கருவிகள் உள்ளன. எரிபொருளின் எடை 4000 கிலோ. விண்கலத்துடன் 14 பேலட்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதில், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் 'ரெட்ரோ ரெப்லெக்டர்' என்ற பேலட்டையும் சந்திரயான் - 2 விண்ணுக்கு எடுத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்திரயானின் பயணம்:

நிலவில் ஒரு நாள் என்பது பூமியில் 14 நாட்களுக்குச் சமம். எனவே, ரோவர் 14 நாட்கள் நிலவை ஆய்வு செய்யும். ரோவரில் அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட இரண்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகள் நிலவில் கனிம வளத்தை ஆய்வுசெய்யும். அதிநவீன கேமராவின் மூலமாக தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து இஸ்ரோவிற்கு அனுப்பும் என்று கணக்கிடப்பட்டது.

ஜூலை 22 ல் ஏவப்பட்ட சந்திரயான் -2 விண்கலம் 23 நாட்கள் பயணம் செய்து, ஆகஸ்ட் 14ம் தேதி பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து விலகி ஆக. 20ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி முதல் முறையாக நிலவை படம் பிடித்து அனுப்பியது. செப்டம்பர் 2 ஆம் தேதி ஆர்பிட்டர் இலிருந்து லேண்டர் விக்ரம் தனியாகப் பிரிந்தது.

சந்திரயான் -1 செலுத்தும்போது 'ஹார்டு லேண்டிங்' முறையில் தான் நிலவில் தரையிறக்கப்பட்டது. ஆனால், சந்திரயான் -2 'சாப்ட் லேண்டிங்' முறையில் தரையிறக்கப்படுகிறது.

லேண்டர் விக்ரமிடமிருந்து சிக்னல்?

இன்று(செப்.7) சரியாக நள்ளிரவு 1.46 மணியளவில் லேண்டர் விக்ரம் தரையிறங்கத் தொடங்கியது. இதில், நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவு வரை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி லேண்டர் விக்ரம் சரியாக தரையிறங்கி வந்தது. ஆனால், அதன் பிறகு லேண்டர் விக்ரமிடமிருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைக்கவில்லை.

அதேசமயம், 2.1 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பிறகு லேண்டர் விக்ரம் பாதை மாறியதாகவும் தெரிகிறது. அதன் வேகமும் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இஸ்ரோவின் அதிகாரி தெரிவிக்கும் போது, "சந்திரயான் -2 திட்டத்தின் 5 சதவீதம்தான் தோல்வியடைந்துள்ளது. மீதமுள்ள 95 சதவீத செயல்பாடுகள் தனது பணியைத் தொடரும். ஆர்பிட்டர் நிலவை வெற்றிகரமாக சுற்றி வருகிறது. ஒரு வருட காலத்திற்கு ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி வரும் போது பல்வேறு புகைப்படங்களை இஸ்ரோவுக்கு அனுப்பும். அது லேண்டர் விக்ரமின் புகைப்படத்தையும் எடுக்கக்கூடும்" என்று தெரிவித்தார்.

நிலவின் தென் துருவ பகுதியில் பல மில்லியன் ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் படவில்லை. இதனால் இவ்விடத்தில் நீரின் அளவு அதிகமாகவே இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆர்பிட்டர் அனுப்பும் புகைப்படங்கள் வழியாகவும் இதனை உறுதி செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

தென் துருவப்பகுதி மிகவும் இருட்டாக மற்றும் மேடு, பள்ளங்கள் நிறைந்த கரடு, முரடான பகுதி என்பதால் அனைத்து நாடுகளுக்கும் சற்று சவாலாகவே இருந்தது. அந்த வகையில், லேண்டர் விக்ரம் நிலவின் தென் துருவப் பகுதியை அடைந்து வரலாற்று நிகழ்வை ஏற்படுத்தியுள்ளது.

தோல்வியிலும் சாதனை:

நிலவு குறித்து ஆராய்ச்சி செய்ய இதுவரை 38 முறை செயற்கைகோள்களை அனுப்பி பல்வேறு நாடுகள் முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் உள்ளன. அதில் சில வெற்றி பெற்றுள்ளன. ஆனால், நிலவுக்கு வெற்றிகரமாக சென்ற அனைத்து செயற்கைகோள்களுமே நிலவின் வட துருவத்தில் தான் தடம் பதித்தன. முதல்முறையாக நிலவின் தென் துருவப்பகுதிக்குச் சந்திரயான் -2 சென்றுள்ளதே ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, நிலவின் தென்பகுதிக்கு விண்கலத்தை அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, சந்திரயான்-2வின் தகவல்கள் நாசாவிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

நிலவின் ஆராய்ச்சிக்காக அமெரிக்கா, அப்பல்லோ 11 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பிய 50 வது ஆண்டில், தற்போது அதைவிட மிகவும் குறைந்த செலவில் சந்திரயான்- 2 திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்பட்டுள்ளதே இஸ்ரோவின் தனிப்பெரும் சாதனை.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் 300 -400 ஆண்டுகளில் செய்த சாதனையை இஸ்ரோ 50 ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ளது. இதுவே பாராட்டப்படவேண்டிய ஒன்று.

சந்திரயான்- 2 முழு வெற்றி பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. இதனால், இது தோல்வி என்று கூற முடியாது. விண்கலத்தின் முக்கியப் பகுதியான ஆர்பிட்டர் செயல்பாட்டில் இருப்பதால், அது அனுப்பும் புகைப்படங்களை வைத்து லேண்டரின் நிலையை தெரிந்துகொள்ளலாம். ஒரு திட்டம் செயல் இழக்கும் சூழ்நிலையில், அதற்கு மாற்று முயற்சியாக என்ன செய்ய வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் திட்டமிட்டு தானே வைத்திருப்பார்கள். எனவே சந்திரயானின் முழு வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருப்போம்.

'சைக்கிள் கேரியரிலும், மாட்டு வண்டியிலும் பாகங்களை வைத்து கொண்டு ராக்கெட் விட்ட கூட்டம்' என்று நம்மை கேலி செய்த ஸ்பேஸ் எலைட் நாடுகள் கூட இன்று சந்திரயான் - 2 நிகழ்வை பார்த்துக்கொண்டு தான் இருந்திருக்கும். கேலி செய்த உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்ததே இஸ்ரோவின் வெற்றி தானே?

அதுபோன்று, வளர்ந்த நாடுகள் மட்டுமே விண்வெளித்துறையில் சாதனை படைத்து வரும் நிலையில், வளரும் நாடுகளும் சாதிக்க முடியும் என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டியுள்ளனர் நமதுஇஸ்ரோ விஞ்ஞானிகள். அவர்களது வெற்றிப்பயணம் தொடர நமது வாழ்த்துகளை தெரிவிப்போம்.


Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here