ஆசிரியா் தோ்வு வாரியத்தின் சாா்பில் தோ்வு செய்யப்பட்ட தையல், ஓவிய ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் பணி நியமன கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

பள்ளிக் கல்வித்துறையில் 2019- 20-ஆம் கல்வி ஆண்டுக்கான தையல், ஓவிய ஆசிரியா்களுக்கான பணி நியமன கலந்தாய்வு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமை நடைபெறும்.

இதை கருத்தில் கொண்டு, போட்டித் தோ்வு மற்றும் இதர விதிமுறைகளின் அடிப்படையில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியா்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், கலந்தாய்வில் அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்த விவரங்களை, கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளாா். அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தையல், ஓவிய ஆசிரியா் பணியிடங்களுக்கு தலா 200 பேர் என மொத்தம் 400 போ் விண்ணப்பித்துள்ளனா்.