அண்மைக் காலமாக ஆசிரியப் பெருமக்களின் பணித்திறத்தை வேண்டுமென்றே ஏதோ குற்றவாளிகளைக் கையும் களவுமாகப் பிடிக்க இயக்குநர் முதற்கொண்டு மாவட்ட, வட்டார அளவில் அலுவலர்களை ஏவிவிடும் வேடிக்கை  மலிந்து வருகிறது. வேறெந்த துறைகளிலும் கடைப்பிடிக்காத இதுபோன்ற பதட்ட நிலை நடைமுறைகள் ஆகச்சிறந்த உயர்பணியாக விளங்கும் கல்விப் பணியில் கணந்தோறும் பணியிடைக் குறுக்கீடுகள் என்பது மனித ஆக்கப் பேரிடர்கள் அன்றி வேறில்லை. ஆசிரியர்களின் மீதான நம்பிக்கைகளும் மதிப்புகளும் சமூகத்தில் அதிகரித்திட அரசு மற்றும் அலுவலர்களின் அரவணைப்பு மிக அவசியம். ஆங்காங்கே மண்டிக் காணப்படும் களைகளைக் களைய நல்ல விளைச்சல் நிலத்தை ஒட்டுமொத்தமாக யாராவது அழிக்க முன்வருவார்களா? இருந்தபோதிலும், தம் துறை சார்ந்த மன நெருக்கடிகளைப் புறந்தள்ளி வைத்து மனசாட்சிக்கு விரோதமில்லாமல் மாணவர்களின் நலனைக் தோள்களில் சுமந்து கொண்டு கண்துஞ்சாமல் உழைக்கும் காரிகைகள் இங்கு ஏராளம்.

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் விதமாக கடந்த பல ஆண்டுகளாகவே அரசுப் பள்ளிகளின் மீதான மறைமுகத் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. அதன் ஒரு பகுதியாக தனியார் பள்ளிகள் வெடிப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் வெளிப்படையான ஊரகப்பகுதி மாணவர்கள் சேர்க்கைக்கான கோடிக்கணக்கிலான நிதியுதவிகள் ஆண்டுதோறும் அளித்து வருதல் என்பன ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஓர் அரசு என்பது அதன் கீழுள்ள அரசுப் பள்ளிகளை நல்ல முறையில் வளர்த்தெடுக்க முன்வரவேண்டும். அதைவிடுத்து நடுத்தர மற்றும் பாமர மக்களிடையே அரசுப்பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அவநம்பிக்கைகளை அதிகரிக்கச் செய்து போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக நிறைவேற்ற நிதிச் சுமையைக் காரணம் காட்டி மறுப்பதும் என்பது வேதனைக்குரியது. கடந்த பத்தாண்டுகளில் பல நல்ல நிலைமையில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் எண்ணிக்கையும் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடிக்குமேயானால் எதிர்காலத்தில் அரசுப் பள்ளிக் கூடங்கள் மாணவர்கள் ஒருவரும் இல்லாத மயானக் கூடங்களாகத்தான் காட்சியளிக்கும். கூடவே, பல இலட்சக்கணக்கான ஆசிரியப் பணியிடங்கள் ஒழிக்கப்பட்டு வருங்கால படித்த இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.

இந்நிலையில் 35 மாணவர்களுடன் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஈராசிரியர் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில் தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றார் திருமதி மே.லதா! இவர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரிடம் வீடு வீடாகச் சென்று காட்டிய அன்புக்கும் அக்கறைக்கும் கட்டுப்பட்டதன் விளைவாக பள்ளி மாணவர் சேர்க்கை இருமடங்கு அதிகரித்தது. அதுமட்டுமின்றிக் கூடுதலாக ஓர் ஆசிரியர் பணியிடத்தையும் பெற்று பள்ளியின் முகத்தை மாற்றினார்.

மேலும், ஒரு பள்ளிக்குரிய போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் தமிழகத்தில்  இன்றளவும் காணப்படும் பரிதாபப் பள்ளிகளுள் ஒன்றாக விளங்கும் தம் பள்ளிக்குத் தேவையான மின் இணைப்பு வசதியினைப் போராடிப் பெற்றது இவரது பெரும் சாதனையாகும். அதன்பின் இருண்டு கிடக்கும் வகுப்பறையை மின் விளக்குகளால் ஒளிரச் செய்துள்ளார். பள்ளிக் குழந்தைகளின் புழுக்கத்தைப் போக்கும் வகையில் மின் விசிறிகள் பலவற்றை நிறுவிப் பிஞ்சு உள்ளங்களில் தென்றலாக இவர் உலவியது குறிப்பிடத்தக்கது.

அதுபோலவே, குடிநீர் இணைப்பையும் கோரிப் பெற்று, நல்ல பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியைக் குழந்தைகளுக்கு வழங்கி தாகம் தணித்ததையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இருபாலருக்கும் தனித்தனிக் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தித் தந்து குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தது அனைவருக்கும் வியப்பைத் தந்தது. புதிய சமையலறை ஏற்படுத்திக் கொடுத்ததும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சுற்றுச்சுவர் வசதியினைத் தோற்றுவித்துப் பூமியை மட்டுமல்லாமல் ஊர்ப் பொதுமக்கள் மனங்களையும் குளிரச் செய்தார் என்பது மிகையில்லை.

குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகப் பள்ளிக்கு இடையூறாகவும் பள்ளிப் பிள்ளைகளுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்த உயர் மின்னழுத்த மின் கம்பங்களைச் சட்டமன்ற உறுப்பினர் உதவியுடன் அகற்றப் பெருமுயற்சி எடுத்தது பாராட்டத்தக்கது. அதுபோன்று, வெகு தொலைவில் இருந்து வரும் குழந்தைகளுக்கு மாதாந்தோறும் ரூ. 3000/= வழங்கி இருவேளையும் வாகன வசதி மூலம் கடந்த ஐந்தாண்டுகளாகத் தம் சொந்த செலவில் அழைத்து வரச் செய்து வருவது என்பது இவரது சமூக அக்கறையைப் பறைசாற்றும்.

பள்ளிக் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கச் செய்யும் பொருட்டு தக்க பயிற்சியாளரைக் கொண்டு தற்காப்புக் கலை பயிற்சி வகுப்பையும் அதற்குரிய சிறப்புத் தனி உடை மற்றும் தனியார் பள்ளிக் குழந்தைக்கு இணையான உடுப்புகளுக்கு ஆகும் செலவினைத் தாமே ஏற்றுக் கொண்டதுடன் மேலும், ரூ.75,000/=ஐ மனமுவந்து பள்ளிக்காக அளித்து மெய்நிகர் வகுப்பு ஒன்றையும் உருவாக்கிக் கொண்டுள்ளார்.
வகுப்பறைகள் செயல்பாடுகளிலும் தனி முத்திரை பதிக்கும் விதமாக இவர், குழந்தை மைய அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கும் வகையில் தாமே செய்து கற்றல் மற்றும் விளையாட்டு முறைகளில் பாடக் கடினத் கருத்துகளை குழந்தைகள் மனத்தில் நன்கு பதிய வைக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் உயர் அலுவலர்களின் பாராட்டுக்களைக் குவித்தன. எளிய களப் பயணம், மரத்தடி நிழலை அனுபவித்துக் கொண்டு நாளிதழ் வாசிப்பு, உணவுத் திருவிழா எனக் குழந்தைகளின் உற்சாகமும் ஊக்கமும் குன்றாத வகையில் மகிழ்ச்சியான கற்றலுக்கு வழிவகுத்த இவரது செய்கைகள் பலரது பாராட்டைப் பெற்றது.

மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது மற்றும் மாநில அரசின் நல்லாசிரியர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவரை அவ்வப்போது அலங்கரித்து வந்தாலும் என் ஊர், என் பள்ளி, என் பிள்ளைகள் என்பதில் உறுதியாக இருந்து பள்ளி முன்னேற்றத்தை முழு மூச்சாகக் கொண்டு அயராமல் உழைத்து வரும் இவர் கல்வி வானில் சிறப்பாக ஒளிரும் (தலைமை) ஆசிரியர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

தொடர்வார்கள்...

ஆசிரியரை அழைத்துப் பேச : 6380630423

நன்றி: திறவுகோல் மின்னிதழ்

-முனைவர் மணி கணேசன்


Join Telegram& Whats App Group Link -Click Here