சென்னை: மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழுள்ள நவோதயா பள்ளி கல்வித்திட்டம் இதுவரை தமிழகத்தில் இல்லை. இதற்குக் காரணம் இந்தியை மறைமுகமாக திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்பதுதான்.

மத்திய அரசால் நவோதயா வித்யாலயா பள்ளி திட்டத்தின் கீழ், 1986ம் ஆண்டு மஹாராட்டிர மாநிலத்தில் அமராவரி என்ற இடத்தில் முதல் பள்ளிதொடங்கப்பட்டது. கிராமப்புற, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக, தரமான படிப்பினை விடுதிகளில் தங்கி படிக்க மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், தற்போது தமிழ்நாடு தவிர இதர மாநிலங்களில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு பள்ளி என்ற விகிதத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது.
இந்த பள்ளிக்கூடங்கள் மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் தொடங்கப்படாமல் இருந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்குவங்காளம் இந்த பள்ளிகளை நிறுவ அனுமதி அளித்தது.

நவோதயா பள்ளிகள்
இந்த பள்ளிக்கூடங்களை அமைக்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கவில்லை. ஏனென்றால் இந்த பள்ளிகளில் இந்தி ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தக் காரணத்தால்தான் இந்த பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் இல்லை.

ஆட்சியர் கண்காணிப்பு
இந்த நவோதயா பள்ளிகள் அந்த அந்த மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் செயல்படுவதுடன், மாவட்டத்தின் மாதிரி பள்ளிகளாகவும் செயல்படும். மாணவ, மாணவிகள் இரு பாலரும் தனி, தனி விடுதிகளில் தங்கி பயிலும் மத்திய கல்வி வாரிய முறையில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது.

மாணவர்கள் திறமை
படிப்பில் திறமை வாய்ந்த கிராமப்புற மாணவ, மாணவியருக்கு இலவச கல்வியுடன் உணவு, உடை, உறைவிடம், சீருடை, காலணிகள், புத்தகங்கள், எழுது பொருட்கள், எல்லா பொருட்களும் வழங்குவதுடன் மருத்துவமும் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றது

மும்மொழித்திட்டம்
மாணவ, மாணவியர்கள் பொது நுழைவுத் தேர்வு மூலம், அவர்கள் படித்த தாய்மொழியிலே, 6ம் வகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த பள்ளிகளில் இந்தி மும்மொழித் திட்டத்தில் பயிலும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் 10ம் வகுப்பு இறுதி பரிட்சைக்கு இந்தி கட்டாயம் இல்லை.

80 மாணவ மாணவிகள்
இந்த பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர் கொண்ட 2 பிரிவுகளாக, வகுப்பிற்கு 80 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இவர்களில் 33% மகளிர், தாழ்த்தப்பட்டோர் 15%, மலைசாதியினர் 7.5% ஆகும். அது போன்று கிராமப்புற மாணவ, மாணவியர் 75%, இதர பிரிவினர் 24% மாணவ, மாணவிகளாக இந்த பள்ளிகளில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

படிப்புடன் கலைகள்
இப்பள்ளிகளில் கல்வியுடன், விளையாட்டு, கலை, கைவினை, கணினி கல்வி, நாட்டுப்புறக் கலைகள் போன்ற நுண்கலைகளும் தினசரி பிற்பகல், மாலை வேளைகளில் நன்கு கற்பிக்கப்படுவதால் மாணவ, மாணவிகள் அனைத்துத் துறைகளிலும் முழு பரிமாணம் பெற்று சிறந்த மாணவர்களாக மாறி வருகின்றனர்.

தமிழக அரசு வாதம்
தமிழகத்தில் போதுமான கல்வி வாய்ப்புகள் உள்ளதால், மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தேவையில்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்தது. எனினும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் நவோதயா பள்ளி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
குமரி மகா சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து 8 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர்ப்பு ஏன் 
நவோதயா பள்ளிகள் தொடங்கப்படுவதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மதவாதத்தையும், இந்தியையும் திணிக்க முயற்சி செய்கிறது என்பது திமுகவின் குற்றச்சாட்டு. மீண்டும் பல அடுக்கு கல்வி முறைக்கு வழி வகுக்கும் என்று கல்வியாளர்கள் கூறியுள்ளனர்