கர்ப்பம் உறுதி செய்யப் பட்டதுமே பிரசவம் குறித்த பயம் வந்துவிடுகிறது இன்றைய பெண்களுக்கு. இதில் வேடிக்கை... கர்ப்பிணிகள் சிசேரியன் பிரசவத்தை விரும்புவதும், இயற்கை நிகழ் வான சுகப்பிரசவத்தில் இருந்து விலக நினைப்பதும்தான்.



இதற்கிடையில், ‘வாட்டர் பர்த்’ எனப்படும் தண்ணீர்த் தொட்டிக்குள் கர்ப்பிணியை பிரசவிக்கச் செய்யும் முறை, சென்னையில் அறிமுகம் ஆகியிருக்கிறது.‘வாட்டர் பர்த்’ சுகப்பிரசவ முறையை வெற்றிகரமாகக் கையாண்ட, வேளச்சேரி ‘புளூம்’ மருத்துவமனையின் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் கே.எஸ்.கவிதா கவுதம், அந்தப் பிரசவ முறை குறித்துப் பேசினார்...

“இந்த ‘வாட்டர் பர்த்’ முறை, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நம்மிடையே இருந்த வழக்கம்தான். கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில், மிதமான சூட்டில் உள்ள நீரைத் தொட்டு ஒத்தடம் கொடுப்பர். கிராமங்களில் தற்போதும்கூட இந்த வழக்கம் இருக்கிறது. இதனால், கர்ப்பிணிகளுக்கு வலி குறையும், பிரசவமும் எளிதாகும். இதைத்தான் வெளிநாடுகளில் கர்ப்பிணியைத் தண்ணீர்த் தொட்டிக்குள் இருக்கும்படி வைத்துச் செய்கிறார்கள். இந்தப் பிரசவ முறையில், 37 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் உள்ள நீரில் கர்ப்பிணியை அமரச் செய்வோம். இதில், அவர் வலி குறைவாக உணர்வார். குழந்தை பெறுவதும் எளிதாகும். இதற்காக டெல்லியில் இருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தொட்டி வரவழைக்கப்பட்டிருக்கிறது. .


கர்ப்ப மாதங்களிலேயே நீச்சல் பயிற்சி உட்பட, சில பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இயற்கையான முறையில் சுகப்பிரசவமாக எளிய உடற்பயிற்சிகளே போதும். இன்றைய பெண்களுக்கு வேலை அதிகம்தான்... ஆனால், உடல் உழைப்புதான் குறைவு.  அதைச் சரிசெய்யும் வகையிலும், பிரசவத்தின்போது இடுப்பு எலும்பு எளிதாக விலகிக் கொடுக்க உதவும் விதத்திலும்  பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஆயுர்வேத முறைப்படி மசாஜ் செய்வதும் உண்டு. இதனால், கர்ப்பிணிப் பெண்கள் கொஞ்சம், கொஞ்சமாக சுகப்பிரசவத்துக்குத் தயாராகின்றனர். இதுபோன்ற முயற்சிகளால், இனிவரும் காலங்களில் பெண்கள் மத்தியில் சுகப்பிரசவம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படும்” என்கிறார் நம்பிக்கையுடன்.