புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட கைகளில் அணியும் ஸமார்ட் வாட்ச் வடிவிலான அதிநவீன கருவியை உருவாக்கிய சென்னை பெண் பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் இளம் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மின் பொறியியல் பட்டதாரியான அக்ஷயா சண்முகம் அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்திலும் ஆய்வு படிப்பை படித்து முடித்துள்ளார். இவர் யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து கடந்த 2015ஆம் ஆண்டு லும்மி லாப்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதன்மூலம் புகைப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான கையடக்க கருவியை இவர் கண்டுபிடித்துள்ளார்.
ஸ்மார்ட் வாட்ச் வடிவில் இருக்கும் இந்த கடிகாரத்தை கைகளில் அணிந்து கொண்டால், புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்கு 6 நிமிடங்களுக்கு முன்னதாவே ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்கிறது. தற்போது பரிசோதனை அளவில் உள்ள இந்த கருவி அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்ஷயாவின் இந்த சாதனையை பாராட்டி, பிரபல ஃபோர்ப்ஸ் நிறுவனம் 30 வயதுக்கு உட்பட்ட, முதல் 30 சாதனையாளர்கள் பட்டியலில் இவரது பெயரையும் சேர்த்துள்ளது. இதை அறிந்த அக்ஷயா தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாக, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.