ஹைப்பர்லுாப்' எனப்படும் புதிய போக்குவரத்து முறைக்காக, இந்திய மாணவர்கள் வடிவமைத்துள்ள புதிய,'கேப்சூல்' தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் நடந்து வரும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.


 கவனிக்க வைத்த, இந்திய,மாணவர்களின்,ஹைப்பர்லூப்



தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது. தலைநகர் ஐதராபாத்தில் மூன்று நாள் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடக்கிறது.

நேற்று முன்தினம் நடந்த விழாவில், பிரதமர், நரேந்திர மோடி, இதை துவக்கி வைத்தார். அமெரிக்க 'அதிபர், டொனால்டு டிரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான, இவாங்கா இதில் பங்கேற்றார்.

இந்தக் கண்காட்சியில், இந்திய மாணவர்கள் வடிவமைத்துள்ள,ஹைப்பர்லுாப்' எனப்படும், வெற்றிடம் உடைய குழாயில் பயணம் செய்யும் புதிய போக்குவரத்து முறைக்கான, 'கேப்சூல்' எனப்படும் வாகனம், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

'ஓர்க்காபோட்' என பெயரிடப்பட்டுள்ள இந்த கேப்சூலை, இந்திய வர்த்தகப் பள்ளி, ஆமதாபாத் இந்திய நிர்வாகவியல் மையத்தின் மாணவர்கள், பிட்ஸ் பிலானியின் மாணவர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர், எலான் மஸ்க், முதல் முறையாக இந்த ஹைப்பர்லுாப் போக்குவரத்து முறை குறித்து அறிவித்தார். இதன்படி, வெற்றிடம் உடைய குழாயில், கேப்சூல் எனப்படும் வாகனம் மூலம், அதிவேகமாக பயணிக்கலாம்.



இதன் மூலம், மணிக்கு, 700 கி.மீ., வேகத்தில் பயணம் செய்ய முடியும். சுற்றுச்சூழலுக்குபாதிப்பில்லாத, மற்ற போக்குவரத்து முறைகளைவிட, குறைவான செலவில் இதை செயல்படுத்த முடியும். நம் மாணவர்கள் இணைந்து ஹைப்பர்லுாப் இந்தியா என்ற நிறுவனத்தை உருவாக்கி, இந்த ஓர்க்காபோட் கேப்சூலை வடிவமைத்துள்ளனர்.சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில், அனைவரும் இதை ஆர்வமுடன் பார்த்து, அதன் செயல்பாடு குறித்து விசாரித்தனர்.