இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு முனையில் 2004 ஆம் ஆண்டு இதே டிசம்பர் 26-ம் தேதி சுனாமி எனும் ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக மக்கள் மறந்துவிட முடியாது.

கடலுக்கடியில் உருவான 9.1 அதிர்வெண் கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு அலைகள் கரைகளை தாக்கின.

இந்த சுனாமியின் சீற்றத்தால் பல நாடுகளை சேர்ந்த 2,30,000 மக்கள் செத்து மடிந்தனர்.

இதில் பாதி பேர் இந்தோனேசியாவைச் சார்ந்தவர்கள்.

தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள கடலோர பகுதி பாதிக்கப்பட்டது. குறிப்பாக நாகை மாவட்டம் மிகப்பெரிய அழிவை சந்தித்தது.

சுனாமியால் வாழ்வாதாரத்தை பறிகொடுத்த  மக்களை தற்காலிக குடியிருப்புகளில் தங்க வைத்து தேவையான உதவிகள் செய்யப்பட்டன.

பின்னர் அவர்களுக்கு அரசு மற்றும் தொண்டுநிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள் கட்டப்பட்டன.

மக்கள் மனதில் நீங்கா வடுவாக பதிந்துவிட்ட சுனாமியால் இறந்தவர்களுக்கு இன்று கடலோர பகுதிகளில் கண்ணீரஞ்சலி செலுத்தப்படுகிறது.

இதற்கிடையே சுனாமிக்கான மையப்புள்ளியான சுமத்ரா தீவின் ஒரு பகுதியில் குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த குகையை ஆராய்ச்சி செய்தபோது, 7500 ஆண்டுகளுக்கு முன் சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன.

போதிய விழிப்புணர்வு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலகட்டங்களில் ஏற்பட்ட சுனாமிக்கு கோடிக்கணக்கான மக்கள் பலியாகியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.