ஆதார், மொபைல்போன் எண், வங்கி கணக்கு போன்றவற்றின் தகவல்கள் கசியாமல் பாதுகாக்க, நவீன மென்பொருளை, அண்ணா பல்கலை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக, பல்கலையில் சிறப்பு ஆராய்ச்சி மையம், பிப்., 1ல், திறக்கப்பட உள்ளது.உலகம் முழுவதும், காகித பயன்பாடு குறைந்து, டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளது. அலுவலகங்கள் மற்றும் வங்கிகளின் பணிகள், பணப்பரிமாற்றம் என அனைத்தும், டிஜிட்டல் மயமாகின்றன. மேலும், நாடு முழுவதும், போலி முகவரி, இரட்டை முகவரி போன்றவற்றை தடுக்க, பயங்கரவாதத்தை ஒழிக்க, ஆதார் எண் நடைமுறைக்கு வந்து உள்ளது.வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு எண், குடும்ப அட்டை, பள்ளி மாணவர் விபரங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களின் விபரங்கள், ஆதார் எண் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், டிஜிட்டல் முறையில், தேசிய மின்னணு தகவல் தொகுப்பு அமைப்பில் பாதுகாக்கப்படுகின்றன. ஆனாலும், வங்கி தகவல்களும், தனிநபர் விபரங்களும் அவ்வப்போது கசிந்து விடுகின்றன.இதற்கு தீர்வு காண, பல்கலை மற்றும் கல்லுாரி மாணவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி, அண்ணா பல்கலை இன்ஜி., கல்லுாரி மாணவர்கள், டிஜிட்டல் தகவல் பாதுகாப்புக்கான, புதிய மென்பொருள் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளனர். இதற்காக, 'காக்னிசன்ட் டெக்னாலஜி' நிறுவனத்துடன், அண்ணா பல்கலை ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த ஒப்பந்தப்படி, சென்னை, அண்ணா பல்கலையின், தகவல் அறிவியல் தொழில்நுட்ப துறை கட்டுப்பாட்டில், 30 லட்சம் ரூபாய் செலவில், தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கும், இந்த ஆராய்ச்சி மையம், பிப்., 1ல், திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலையின், தொழில் நிறுவனம் மற்றும் பல்கலை இணைப்பு அமைப்பான, சி.யு.ஐ.சி., செய்து வருகிறது. -