தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 13) முதல் முழுமையாக இணைய வழியில் மட்டுமே பத்திரப் பதிவு மேற்கொள்ளப்படும் என்று வேலூர் மண்டலத் துணைப் பத்திரப் பதிவுத் துறைத் தலைவர் சு.பிரபாகர் தெரிவித்தார்.
பத்திரப் பதிவில் நடைபெறும் ஊழல்களைத் தடுக்க இணையவழியில் மட்டுமே பத்திரப் பதிவு மேற்கொள்ள புதிய மென்பொருள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக மாவட்டப் பதிவாளர்கள், சார்- பதிவாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆவண எழுத்தர்கள், பொதுமக்கள், வழக்குரைஞர்கள், கட்டுமானம், ரியல் எஸ்டேட் துறையினர் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய பகுதிகளில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் உள்ளன. இங்கு பணிபுரிவோருக்கு வேலூர் அரப்பாக்கத்தில் உள்ள அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி வகுப்புக்கு உதவிப் பதிவுத் துறைத் தலைவர் ஆர்.ரவீந்திரநாத் முன்னிலை வகித்தார். இதில், வேலூர் மண்டல துணைப் பதிவுத் துறைத் தலைவர் சு.பிரபாகர் பேசியதாவது:
பத்திரப் பதிவை விரைவுபடுத்தவும், நீண்ட நேரம் மக்கள் காத்திருப்பதைத் தவிர்க்கவும் "ஸ்டார் 2.0' என்ற மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணைய வழியில் மட்டுமே பத்திரப் பதிவு செய்யும் புதிய திட்டத்தை தமிழக முதல்வர் திங்கள்கிழமை (பிப்ரவரி 12) தொடங்கி வைக்கிறார். இதையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் நூறு சதவீதம் இணைய வழியில் மட்டுமே பத்திரங்கள் பதிவு செய்யப்படும். இணையவழி மூலம் ஆவணங்கள் கிடைத்ததும் இளநிலை உதவியாளர் ஆய்வு செய்து சார்-பதிவாளருக்கு அனுப்புவார். அவர் பரிசீலித்து ஆவணத்தைப் பதிவு செய்யலாம் என உத்தரவிடுவார். இதன் பிறகு எந்த நாள், எந்த நேரத்தில் பதிவு செய்யலாம் என்பதை சொத்து வாங்குபவரே முடிவு செய்யலாம். குறிப்பிட்ட நேரத்தில் பதிவு அலுவலகத்துக்கு நேரில் வந்தால் 10 நிமிடங்களில் ஆவணங்களைப் பதிவு செய்யலாம். அன்றே பதிவான ஆவணங்களையும் பெற்றுச் செல்லலாம்.
ஆவணங்கள் உரிமம் மாற்றத்தின் போது, சொத்தின் முந்தைய உரிமையாளருக்கு செல்லிடப்பேசியில் குறுந்தகவல் அனுப்பப்படும். சொத்து மதிப்பீடு, கட்டட மதிப்பீடு வேறுபாடு இருந்தால், அதுகுறித்தும் குறுந்தகவல் அனுப்பப்படும். இதுவரை மாவட்ட அளவில் சேமிக்கப்படும் பத்திரப் பதிவு ஆவண தகவல்கள், இனி சென்னையில் உள்ள மத்திய தொகுப்பிலும் சேமிக்கப்படும். இதனால் ஆவணங்கள் பாதுகாப்பு மேலும் உறுதிபடுத்தப்படும்.
இணைய வழியில் பட்டா மாறுதல் மனுக்களை வருவாய்த் துறைக்கு அனுப்புவதுடன், குறுஞ்செய்தி, ஒப்புகை சீட்டும் அளிக்கப்படும் என்றார் அவர்