பொதுத்தேர்வு குறித்த மன அழுத்தத்தைப் போக்க சமூக வலைதளங்கள் மூலமாக மாணவர்கள், பெற்றோருக்கு ஆலோசனை வழங்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் மன அழுத்தம், கவலை, பயம் ஆகியவற்றைக் களையும் நோக்கில், கல்வித்துறையும், 'தி லெட்' அமைப்பும் ஒருங்கிணைந்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்கவுள்ளது. இந்தத் திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையன் புதன்கிழமை (பிப்.14)-இல் தொடக்கி வைத்தார். ஏப்ரல் வரை இந்தப் பிரசாரம் தொடரும்.
மனநலம் சார்ந்த ஆலோசகர்கள், கல்வியாளர்கள், வல்லுநர்கள் ஆகியோர் மாணவர்கள், பெற்றோருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க தயாராக உள்ளனர். பிரச்னைகளுக்கான ஆலோசனை பெறுவதற்கு சுட்டுரை (டுவிட்டர்), முகநூல், கட்செவி அஞ்சல் ('வாட்ஸ்-ஆப்') ஆகியவற்றில் தொடர்பு கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்தம் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் ஊடகங்கள், பத்திரிகைகள் மூலம் வெளியாகி இருக்கும் கருத்துத் துணுக்குகள் அவர்களுக்கு அளிக்கப்பட உள்ளன.