உதவி பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறும் வகையில் மாநில அளவில் தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு அன்னை தெரசா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட மாநில அளவிலான தகுதித்தேர்வில் பழைய கேள்வித்தாளிலிருந்து 86 சதவிகிதக் கேள்விகள் அப்படியே கேட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (4.03.2018) அன்று அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்திய செட் தேர்வை தமிழகம் முழுவதும் 58 தேர்வு மையங்களில் 41 ஆயிரம் பேர் செட் தேர்வை எழுதியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வின் முடிவில் வினாத்தாள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பை வழங்கவில்லை. இந்த ஆண்டு தேர்வு முடிந்தவுடன் கேள்வித்தாளை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது.
தேர்வு எழுதியவர்கள் வீட்டுக்குச் சென்றவுடன், கேள்விக்கான பதிலை தேடிய போது, பழைய கேள்வித்தாளிலிருந்து அப்படியே கேள்விகள் கேட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். முதல் தாளில் 50 கேள்விகள் கேட்கப்படும். இதில் 43 கேள்விகள் அதாவது 86 சதவிகித கேள்விகள் பழைய நெட் தேர்வின் கேள்வித்தாளிலிருந்து வினாக்களை எடுத்துத் தொகுத்து வழங்கியிருக்கின்றனர்.
இந்த அதிர்ச்சியான சம்பவம் குறித்து நெட்/செட் அசோசியேஷன் சங்கத்தின் ஆலோசகர்களாக உள்ள சுவாமிநாதனிடம் பேசினோம்.

``பொதுவாக, ஐந்து முதல் 10 சதவிகித கேள்விகள் பழைய வினாத்தாளிலிருந்து கேட்பது வழக்கம். ஆனால், கடந்த வாரம் நடந்த தேர்வில் இருந்து 50 கேள்விகளில் 43 கேள்விகள் அப்படியே எடுத்துத் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். அதுவும், மாணவரின் திறனை பரிசோதனை செய்வதற்காக ஒரு பத்தி கொடுத்து அதில் கேட்கப்படும் comprehensive questions அப்படியே எடுத்துக் கொடுத்து இருக்கிறார்கள். இதில் கேள்விகளை கூட மாற்றிக் கேட்கவில்லை. பழைய கேள்வித்தாளில் இருப்பதுபோலவே கொடுத்து இருக்கின்றனர்.
கேள்வித்தாளைத் தயாரிக்க சரியான நேரம் வழங்காமல் அவசர அவசரமாகக் கேட்டு பெற்றிருக்கலாம். அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றுபவர்களைத் தகுதிபெற வைக்கவும், எளிதில் தேர்ச்சி பெறும் வகையில் கேள்வித்தாளை வெளியிடாமலேயே பழைய கேள்வித்தாளைப் படித்துவிட்டு வாருங்கள் என்று சொல்லி இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதுவும் அனைவருக்கும் பொதுத்தேர்வுக்கான முதல்தாளில் கேள்விகள் கேட்டு இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இரண்டாவது தாள் என்பது ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் மாறும். இதனால் குறிப்பிட்ட பாடப்பிரிவில் இருப்பவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.
முதல் தாளில் ஆசிரியர் பணித்திறன், ஆராய்ச்சி திறன், ஆசிரியர் மேம்பாட்டுத்திறன் போன்ற விஷயங்கள் குறித்து கேள்விகள் இருக்கும். இந்தத் தேர்வுக்கு நன்கு படித்திருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், பழைய கேள்வித்தாளிலிருந்து கேள்விகள் கேட்டிருப்பதால் எல்லோரும் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அன்னை தெரசா பல்கலைக்கழகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திய செட் தேர்வு குறித்து வினாத்தாளை மாணவர்களிடம் வழங்கவில்லை. தேர்வுக்கு முன்பு விகடனில் வெளியான செய்தியின் அடிப்படையிலேயே இந்த ஆண்டு தேர்வுக்குப் பின்னர் வினாத்தாளை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதித்தது. இதனால் தற்போது எப்படித் தேர்வு வினாத்தாளைத் தயாரித்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த தேர்வு வினாத்தாளை ஆய்வு செய்தால் இன்னும் பல உண்மைகள் வெளியே வரலாம்" என்றார்.
இதுகுறித்து, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளியிடம் பேசினோம்.

``கேள்வித்தாளைத் தயாரிக்க பேராசிரியர் தலைமையில் ஒரு குழு அமைக்கிறோம். இந்தக் குழுவில் தமிழகப் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் ஒருவரும், வேறு மாநிலத்திலிருந்து பேராசிரியர் ஒருவரும், இரண்டு இணை பேராசிரியர்கள் என பெரிய குழு அமைத்து அந்தக் குழு வழங்கும் கேள்விகளிலிருந்து தேர்ந்தெடுத்து கேள்வித்தாளை தயாரிப்பது வழக்கம். நாங்கள் எந்த வினாவங்கியில் இருந்தும் கேள்விகள் எடுப்பதில்லை. இதனால் பழைய கேள்வித்தாள் வினாக்கள் கேட்கவே வாய்ப்பில்லை" என்றார்.
எங்கிருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான விவரங்களை அவரது அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அதனை ஆய்வு செய்து விவரங்களை வழங்கினால் அதனையும் வெளியிட நாம் தயாராக இருக்கிறோம்.