பி ளாஸ்டிக் பயன்பாடு என்பது இன்றைக்குத் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஒரு புறம் தேவைக்குத் தகுந்தவாறு பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு கொண்டிருக்கும் அதே வேளையில் மறுபுறம் கழிவாக உருமாறிக்கொண்டே இருக்கிறது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு எளிதானதாக இருந்தாலும் மக்காத தன்மை கொண்டது என்பதுதான் அதிலிருக்கும் பிரச்னை. பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்குக் குறைந்தபட்சமாக ஐந்நூறு முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை கூட ஆகலாம் என்பது ஆராய்ச்சியாளர்கள் கூறும் அதிர்ச்சி கணக்கு.
இத்தகைய பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. கடலில் கலந்துவிட்ட கழிவுகளால் பாதிக்கப்பட்டு இறக்கும் கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நிலத்திலோ இன்னும் மோசமான பாதிப்புகளை அது ஏற்படுத்துகிறது. இதன் மூலம் உருவான பாதிப்புகள் முதல் இனிமேல் உருவாகப்போகும் பாதிப்புகள் வரை உலகம் அறிந்திருந்தாலும் கூட ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் பிளாஸ்டிக் உருவாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
பிளாஸ்டிக்கை மக்க வைப்பதற்கான தீர்வுதான் என்ன?
இப்படி ஒவ்வொரு நாளும் பல மில்லியன் டன் கணக்கில் கழிவுகளாக உருமாறும் பிளாஸ்டிக் கழிவுகளை மக்க வைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க பல வருடங்களாக முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படி ஒரு முயற்சியின்போதுதான் 2016-ம் வருடத்தில் ஜப்பானில் விஞ்ஞானிகள் குழு ஒன்று அந்தப் பாக்டீரியாவை கண்டறிந்தார்கள். குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளின் நடுவே ஆய்வு செய்யும்போது கண்டறியப்பட்ட அந்தப் பாக்டீரியா அவர்கள் அதிசயப்படும் வகையில் ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தது. குப்பைகளில் இருந்த PET என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாலிஎத்திலீன் டெரெப்த்தலேட்(Polyethylene terephthalate) எனப்படும் ஒரு வகை பிளாஸ்டிக்கை உணவிற்கான மூலப்பொருளாக அந்தப் பாக்டீரியா பயன்படுத்திக்கொண்டிருந்தது. அப்படி அந்தப் பாக்டீரியாக்களின் கூட்டம் உணவிற்காக PET-டை பயன்படுத்தும் போது அது பிளாஸ்டிக்கின் மூலக்கூறுகளை உடைக்கும் தன்மையைக் கொண்டிருந்ததையும் கண்டறிந்தார்கள். அந்தப் பாக்டீரியாவிற்கு Ideonella sakaiensis 201-F6 என்று பெயரிட்ட அந்த விஞ்ஞானிகள் குழு இந்தப் பாக்டீரியா சிறப்பாகச் செயல்படும். ஆனால், இதை நடைமுறைக்குக் கொண்டுவருவது சாத்தியமானதாக இருக்குமா என்று தெரியவில்லை எனவும் தெரிவித்திருந்தார்கள். இந்தப் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது பிளாஸ்டிக்கிற்கு எதிரான முக்கியமான ஒன்றான கருதப்பட்டது. ஏனென்றால் அதற்கு முன்பு வரை அது போன்ற ஒரு விஷயம் கண்டுபிடிக்கப்பட்டதில்லை.
அதன் பிறகு ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் தற்போழுது அது போன்ற பிளாஸ்டிக்கை சிதைக்கும் நொதி ஒன்றை யதேச்சையாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் மற்றொரு குழுவினர். இங்கிலாந்தைச் சேர்ந்த போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்காவின் ஆற்றல் துறை மற்றும் தேசியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் ஆகியோர் நடத்தி வந்த ஆராய்ச்சியின் பொழுதுதான் இந்த நொதியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாக்டீரியா பயன்படுத்தும் நொதியின் விரிவான கட்டமைப்பு விஞ்ஞானிகளுக்குத் தெரிந்திருக்கிறது. எனவே, அதில் மாற்றம் செய்து அதை மேம்படுத்தலாம் என்று முயற்சிக்கும் போதுதான் இந்தப் புதிய நொதியை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த நொதி சில நாள்களிலேயே பிளாஸ்டிக்கை சிதைக்கும் வேலையில் இறங்கி விடுகிறது என்பது ஆச்சர்யமளிக்கும் விஷயம். எனவே, பிளாஸ்டிக் மக்குவதற்குத் தேவைப்படும் பல நூறு வருடங்கள் என்ற கால அளவை இந்த நொதியின் மூலமாக சில நாள்களாகக் குறைத்து விட முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது போல இல்லாமல் இதைப் பெரிய அளவில் நடைமுறைப்படுத்த முடியும் என்பதுதான் ஹைலைட்.
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கில் அதிகம் பயன்படுத்தப்படுவது பாலிஎத்திலீன் டெரெப்த்தலேட் வகைதான். குளிர்பான பாட்டில்கள் முதல் நம்மைச்சுற்றி கண்ணில் படும் பெரும்பாலான பிளாஸ்டிக் பொருள்கள் பெரும்பாலும் இந்த பாலிஎத்திலீன் டெரெப்த்தலேட் வகை பிளாஸ்டிக்கால்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இந்தக் கண்டுபிடிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகம் முழுவதும் ஒரு நிமிடத்தில் விற்பனையாகக் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகம். இந்த எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் இருபது மடங்கு அதிகரிக்கும். பிளாஸ்டிக்கைப் பொறுத்தவரையில் பெரும்பாலான இடங்களில் அதன் பயன்பாட்டைத் தவிர்க்கவே முடியாது என்ற நிலை உருவாகிப் பல காலமாகி விட்டது. அதன் படி இன்றைக்கு இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் குறைப்பதற்கு உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவது மறுசுழற்சிதான். பாட்டில்கள் பயன்பாட்டிற்குப் பிறகு மறுசுழற்சிக்குச் செல்லும் விகிதம் என்பது பத்து சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. மறுசுழற்சி தவிர்த்து பிளாஸ்டிக் பாட்டில்களில் பெரும்பாலான பகுதி கழிவுகளாக நிலத்தையும் கடலையும்தான் சென்றடைகின்றன. இனிமேல் பிளாஸ்டிக்கை மக்க வைக்க முடியும் என்ற புதிய நம்பிக்கையை உலகத்திற்கு அளித்திருக்கிறது இந்தக் கண்டுபிடிப்பு .