இரண்டாம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் எதுவும் கொடுக்கக்கூடாது என தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுவின் பாடத்திட்ட விதிகளை மீறி சிபிஎஸ்இ பள்ளிகள் பாடங்களை போதிக்கின்றன என்றும், குழந்தைகளுக்கும் வீட்டுப்பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனால் குழந்தைகள் தங்களது எடையைக்காட்டிலும் கூடுதல் சுமையாக புத்தகங்களை சுமந்து செல்வதால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு செயலாளர் மேஜர் ஹர்ஷ் குமார் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ஒரு குழந்தைக்கு எவ்வளவு நேரம் போதிக்க வேண்டும், குழந்தை எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்பதை வரையறுத்துதான் பாடத்திட்டமே உருவாக்கப்படுகிறது என்றார். இரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் எதுவும் கொடுக்கக்கூடாது எனவும், மூன்றாம் வகுப்பு வரை மூன்று பாடங்கள் மட்டுமே போதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார். இதனை நாடு முழுவதும் உள்ள 18 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டு 12 வருடங்கள் ஆனதால், விரைவில் அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்படும் என தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுவின் தமிழக தலைவர் ஜி.அறிவொளி தெரிவித்துள்ளார்.