மே மாத இறுதிக்குள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வுக்குட்படுத்தப்படாத பள்ளி வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது: தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொத்தம் 37,107 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க முன்கூட்டியே பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சென்றும், சில இடங்களில் பள்ளி வாகனங்கள் வரவழைக்கப்பட்டும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில், அரசால் வரையறுக்கப்பட்ட 16 பாதுகாப்பு அம்சங்களும் எவ்வித குறைபாடும் இன்றி உள்ளனவா? என்பதை ஆய்வு செய்கிறோம்.
என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள்: பள்ளி வாகனங்களில் முகப்பு விளக்கு, முன் மற்றும் பின்பக்கத்தில் சிவப்புநிற எச்சரிக்கை விளக்கு, வலது மற்றும் இடது புறம் திரும்புவதை குறிக்கும் "இண்டிகேட்டர்' விளக்கு, வைஃப்பர், வாகனங்களில் உள்ள டயர்கள் சரியாக செயல்படும் வகையில் உள்ளனவா என்பன ஆய்வில் அடங்கும்.
மேலும், பள்ளிக் குழந்தைகள் ஏறி இறங்கும் வகையில் தாழ்வாக 30 செ.மீ., உயரத்துக்குள் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளனவா?, பேருந்துக்குள் உள்ள தரைப் பலகைகள் அனைத்தும் எவ்வித இடைவெளி இன்றியும், உடையாமலும் உள்ளனவா?, ஓட்டுநருக்கு அருகே பள்ளிக் குழந்தைகள் செல்லாவண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பவையும் கருத்தில் கொள்ளப்படும்.
அத்துடன் அவசர கால கதவு, ஜன்னல்கள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக் கட்டுப்பாட்டு கருவி ( நகரத்தில் 40 கி.மீ., வேகத்திலும், கிராமப்புறத்தில் 50 கி.மீ., வேகத்திலும் இயக்கப்பட வேண்டும்), குழந்தைகள் அமரும் இருக்கைகள் அனைத்தும் கிழியாமல் உள்ளனவா? என்பது குறித்தும் ஆய்வின்போது பரிசோதிக்கப்படும்.
பேருந்துக்கான பேட்டரிகள் எளிதில் தீப்பற்றாவண்ணம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா, பேருந்தின் இருபுறங்களிலும் பள்ளியின் பெயர், விலாசம் எழுதப்பட்டுள்ளதா, பின்புறத்தில் பள்ளி மற்றும் ஆர்டிஓ அலுவலகத்தின் தொலைபேசி அல்லது செல்லிடப்பேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளதா, பேருந்தின் ஓட்டுநர் குறைந்தது 5 வருட அனுபவம் பெற்றிருக்கிறாரா, அவருடன் வரும் உதவியாளருக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா?, பள்ளி வாகனம் என்பதற்கான இலட்சினை நான்கு புறங்களிலும் ஒட்டப்பட்டுள்ளனவா ஆகிய அம்சங்களும் ஆய்வில் இடம்பெறும்.
இந்த 16 பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுகள் இருந்தால், ஒரு வாரத்திற்குள் அவற்றை சீர்செய்ய உத்தரவிடப்படும். பெரிய அளவில் குறைபாடுகள் இருந்தால், அந்த வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.
30-க்குள் ஆய்வறிக்கை: பள்ளி வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கையை வரும் 30 -ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 3 மாதத்துக்கு ஒருமுறை பெற்றோர் -ஆசிரியர் கூட்டம் நடத்தப்படும்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலரையும் அழைத்து, அவரது முன்னிலையில் பேருந்துகளின் பாதுகாப்பு குறித்தும், ஓட்டுநர், அவரது உதவியாளரின் செயல்பாடு குறித்தும் பெற்றோர் தயங்காமல் விவாதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.