தலைமை ஆசிரியர் பணியிடங்கள் வெளிப்படையாக நிரப்பப்படுகிறது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபி குள்ளம்பாளையத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.
அரசு அதில் தனிக்கவனம் செலுத்தியதோடு, அது சம்பந்தப்பட்ட வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து விட்டது.இதனால் தற்போது தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் வெளிப்படையாக நிரப்பப்பட்டு வருகிறது. தங்களது குழந்தைகளை ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோர்களிடம் அதிகமாக உள்ளது.
தற்போது அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில்50 சதவீதம் வரை ஆங்கில வழியில் மாணவர்கள் படிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இதன் மூலம் கிராமப்புற மாணவர்களும் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியும். ஏற்கனவே, அரசு அறிவித்தபடி தேர்வு எழுதிய சிறப்பாசிரியர்களுக்கான காலிபணியிடங்கள் ஒளிவுமறைவின்றி முறைப்படி வெளிப்படை தன்மையோடு நிரப்பப்படும். மேலும், கூடுதல் காலி பணியிடங்களை நிரப்ப முதல்–அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 1 முதல் 8–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகளுக்கான சீருடைகள் மாற்றியமைக்கப்படும்.
சென்னையில் உள்ள அண்ணா நூலகத்தில் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் மாணவ–மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படும். இதில் மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உடனுக்குடன் சந்தேகத்தை நிவர்த்தி செய்வார்கள்.இவ்வாறு அவர் கூறினார்

0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..