தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை
ஆசிரியர் பணியிடங்களை கலந்தாய்வு முறையில் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரிலுள்ள சாமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், அச்சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:
அரசாணை 101-இல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை இழிவுப்படுத்தும் வகையிலுள்ள சரத்துகளை நீக்க வேண்டும். மேல் நிலைப்பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் இதர பணியிடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். 5 மண்டல மாவட்ட தலைநகரங்களில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மு.பொன்முடி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் ஆ.ரமேஷ், மாநில பொருளாளர் செ.சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் தலைவர் து.சுப்பிரமணியன்,கௌரவத் தலைவர்கள் வா.ராதாகிருஷ்ணன்,சி.சண்முகம் பங்கேற்றுப் பேசினர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி சிறப்புரையாற்றினார். முன்னதாக மாவட்டத் தலைவர் அ. ராசேந்திரன் வரவேற்றார்.முடிவில் மாவட்டச் செயலர் க.காமராஜ் நன்றி தெரிவித்தார்