குழுக்களிலேயே தனி நபருக்கு பதில் மெசேஜ் அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் 'மெசேஜிங்' சேவைகளில் பிரபலமானதாகவும், அதிகம் பயன்படுத்தப்படும் சேவையாகவும் இருக்கும் 'வாட்ஸ் ஆப்', இணைய உலகின் வெற்றிக்கதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் அடையாளமாகத்தான் கடந்த 2014-ம் ஆண்டில் முன்னணி சமூக வலைதளமான‌ ஃபேஸ்புக் அதை 19 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியது.


இன்றைக்கு இந்தியாவில் 20 கோடிக்கும் மேலானோர் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்துகின்றனர். இது, முன்னணிச் செயலிகளில் ஒன்றாக இருப்பதோடு, வீடியோ காலிங், செய்திகளைப் பகிர்ந்து கொண்ட பின் திரும்பப் பெறும் வசதி உள்ளிட்ட வசதிகளை அறிமுகம் செய்திருக்கிறது. இதே போல செய்திகளைத் திருத்தும் வசதியும் அறிமுகமாக உள்ளது. இதனாலேயே வாட்ஸ்அப் வெறும் வலைதளமாக இல்லாமல் ஊடகமாக வளர்ந்திருக்கிறது. இந்நிலையில் குழுக்களிலேயே அந்தரங்க முறையில், தனி நபருக்கு பதில் மெசேஜ் அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.


எப்படி இந்த வசதியைப் பெறுவது? * நீங்கள் யாருக்கு பதில் மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அந்த மெசேஜை செலக்ட் செய்து கொள்ளுங்கள். * செலக்ட் செய்தவுடன் வலது மேல்பக்கத்தில் 3 புள்ளிகள் தோன்றும். * அதில் இரண்டாவதாக உள்ள ரிப்ளை ப்ரைவேட்லி என்ற தேர்வை செலக்ட் செய்யவும். * பதில் மெசேஜை டைப் செய்து, தனி நபருக்கு செய்தி அனுப்ப முடியும்.


வாட்ஸ் அப் வரலாறு 2009-ம் ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனத்தை பிரைன் ஆக்‌டன் மற்றும் ஜான் காம் என்ற இரண்டு நண்பர்கள் ஆரம்பித்தனர். இவர்கள் கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டவர்கள். ஆரம்பத்தில் யாஹூ நிறுவனத்தில் வேலை பார்த்தனர். ஆக்‌டன் வேலைக்காக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தில் விண்ணப்பித்தார். ஆனால் இரண்டு நிறுவனங்களிலுமே அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து தன்னுடைய நண்பருடன் சேர்ந்து ஆக்‌டன் ஆரம்பித்ததுதான் வாட்ஸ் அப்.