பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத அல்லது இடைநின்ற பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வரை படித்து தேர்ச்சி பெறாத மாணவர்கள் மாற்றுச் சான்று பெற்று வேறு பள்ளிகளுக்கு சென்று விடுவது அல்லது பள்ளியை விட்டு நின்று விடுவது என 28 ஆயிரம்  மாணவர்கள் இடைநின்று விட்டதாக பள்ளிக் கல்வித்துறை கணக்கெடுப்பில் தெரியவந்தது. இந்நிலையில், பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வசதியாக தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி, வெளியிட்ட அறிவிப்பு:

பள்ளிகள் மூலம் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 1 தேர்வு எழுதிய பிறகு, பள்ளியில் இருந்து மாற்றுச் சான்று பெற்று இடைநின்ற மாணவர்கள், தாங்கள் பிளஸ் 1 படித்த பள்ளிகளின் மூலம் தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு  எழுதலாம். குறிப்பாக தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராமல் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளை எழுதிக்கொள்ளலாம்.

இந்த வகை மாணவர்கள் 11ம் தேதிக்குள் தாங்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று, அசல் மாற்றுச் சான்றையும், தேர்வுக் கட்டணத்தையும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும். தேர்வுக் கட்டணம் தவிர வேறு  கட்டணம் எதையும் பள்ளிக்கு செலுத்த வேண்டியதில்லை. தற்போது பள்ளிகள் மூலம் தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களின் பட்டியலில், இந்த மாணவர்களின் பெயர்களும் இடம்பெறும். அதனால் இந்த மாணவர்கள்  ஆன்லைன் மூலம் தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Whats App Group link