உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். நிகழாண்டு வரும் 15-ம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் பூஜை செய்திடவும் உகந்த நேரமாகும்.

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. 

போகிப் பண்டிகை

சூரிய நாட்காட்டியின் படி, தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப்போயிருக்கும் உபயோகமற்றவை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

தைப்பொங்கல்

ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. தை மாதம் பிறப்பதற்கு முன் நெல் அறுவடையாகின்றது. தை மாதத்தின் முதல் நாளன்று, அந்த புதிய அரிசியை மண் பானையில் வைத்து பொங்கல் செய்வர். இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவர். 

பெரும்பாலும் கிராமங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி பொங்கல் பொங்கியெழும்போது, 'பொங்கலோ பொங்கல்' என்று கூவி மகிழ்வார்கள். இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள். விவசாயத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

மாட்டுப்பொங்கல் 


உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். ஆவினத்திற்கு நன்றி கூறும் இந்நாளாளில், மாட்டு தொழுவத்தினைச் சுத்தம் செய்து, கால்நடைகளைக் குளிப்பாட்டி மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி வீர நடை’ நடக்க வைப்பார்கள். 

அன்று தொழுவத்திலேயே பொங்கல் வைத்து கற்பூர தீபாராதனைக் காட்டப்படும். 'பொங்கலோ பொங்கல்... மாட்டு பொங்கல் பட்டி பெருக.. பால் பானை பொங்க.. நோவும் பிணியும் தெருவோடு போக..' என்று கூறி, மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர். இதன் பின் அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும். 

காணும்பொங்கல் 

பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது கனு’ பொங்கல். ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு’ என்பது பழமொழி. அதாவது பொங்கலில் பொங்கிய பால் சாதத்தை உடன்பிறந்தவர்களின் நலத்திற்காக காணும் பொங்கல்தினம் காக்கா குருவிகளுக்கு அன்னமிடுவதும் இப்பழமொழியின் விளக்கம். 


காணும் பொங்கல் அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். 


அந்தவகையில் நிகழாண்டு வரும் 15-ம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் பூஜை செய்திடவும் உகந்த நேரமாகும். 


இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் இந்நாளில் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெருகிட வாழ்த்துக்கள்!