அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு குறித்து மருத்துவ சங்க நிர்வாகிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த முகமது யுனீஸ் ராஜா தாக்கல் செய்த மனு:
அரசு மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதனால் ஏழை நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில், சிறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை என்ற கோணத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். அவ்வாறு அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், ஏழை நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுவர். ஆகவே, மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து தெளிவான முடிவு எடுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார்.
விசாரணை முடிவில், அரசு மருத்துவர்களின் பதவி உயர்வு மற்றும் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சுகாதாரத்துறை செயலர், நிதித்துறை செயலர் உள்ளிட்ட துறை அதிகாரிகள், ஏற்கெனவே மருத்துவர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்திய குழு மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழு அமைக்கப்படுகிறது.
இந்தக் குழு அரசு மருத்துவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, அதுதொடர்பான அறிக்கையை பிப்ரவரி 12-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..