தனியார் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக்குழு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சுயநிதி வகுப்புகளுக்கும், தனியார் கல்லூரிகளுக்கும் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் குழு அமைத்து கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி மதுரை காமராஜர் பல்கலைக்கழக தனியார் கல்லூரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது.

 எந்தவொரு நடைமுறை விதிமுறைகளையும் அறிவிக்காமல் அமைக்கப்பட்டுள்ள கட்டண நிர்ணயக்குழு சட்ட விரோதமானது.

 தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவில் உள்ளது போல் மேல் முறையீடு செய்யும் வசதி வழங்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

 மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதுதொடர்பாக தமிழக உயர்கல்வித்துறைச் செயலாளர், பல்கலைக்கழக மானியக்குழு, மற்றும் தனியார் கல்லூரி கட்டண நிர்ணயக்குழு ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.