புதுக்கோட்டை,ஜன.6:கஜா புயல் நடத்திய கோரத்தாண்டவத்தில் டெல்டா மாவட்ட மக்கள் சந்தித்த இழப்புகள் ஏராளம். பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு கரம் நீட்ட அரசாங்கத்தை எதிர்பாராமல் எத்தனையோ தன்னார்வலர்களும், தன்னார்வ அமைப்புகளும் மனித நேயத்தோடு கரம் நீட்டி ,மக்களை துன்பத்திலிருந்து கரை சேர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக வீடிழந்த மக்களின் வீடுகளைச் சரிசெய்து கொள்ள உதவும் முயற்சியாக முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பழனியப்பன், சிலம்பாயி, பானுமதி என 3 வீடுகளுக்கும்,  தஞ்சாவூர் மாவட்டத்தில் சித்திரமதி, திருவாரூர் மாவட்டத்தில் ரசூல் பீவி  என 5 வீடுகளுக்கும், மேலும் 2 வீடுகளின் புனரமைப்பிற்கும் என  மொத்தமாக ரூ 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை அனுப்பி , அவர்களது இருப்பிடத்தில் அமர்த்தி அழகுபார்த்திருக்கிறது அமெரிக்காவில் இருந்து செயல்படும் தன்னார்வ அமைப்பான ஹை ஆக்டேஸ் என்னும் இளைஞர்களைக் கொண்ட அமெரிக்க அமைப்பு ஆகும்.

இந்த அமைப்பு ஓர் இசைக்குழுவாகத் தொடங்கப்பட்டு, அதன் மூலம் வரும் நிதியில் மக்களின் சுகாதாரம் சார்ந்த செலவினங்களைப் பொறுப்பெடுத்து  சேவையாக செய்து வரும் இந்த அமைப்பில், அமெரிக்காவில் உள்ள இந்தியக்குடும்பங்களில் உள்ள இளைஞர்கள், அதிலும் குறிப்பாக தமிழக இளைஞர்கள் பங்கெடுத்து செயலாற்றி வருவது சிறப்பிற்குரியது.


தற்பொழுது இவர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடு புனரமைப்பு நிதியினைப் பெற்றுக்கொடுக்க ஆசிரியரும், கல்வியாளர்கள் சங்கம ஒருங்கிணைப்பாளருமான சதிஷ்குமார் முயற்சி எடுத்துப் பெற்றுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முயற்சிக்கு அமெரிக்கவாழ் தமிழரும் பொறியாளருமான பிரவீனா வரதராஜன்  இணைப்புப் பாலமாக இருந்து வருகிறார்.ஏற்கனவே இவர்களது ஒருங்கிணைப்பில்தான் சமீபத்தில்  அமெரிக்காவின் டாலஸ் நகரில் கஜா நிவாரணத்திற்காக மொய்விருந்து நடத்தப்பட்டு, அங்கு வாழும் தமிழ்க்குடும்பங்களின் பங்களிப்பில் தமிழ் மலரும் மையம் மூலம் ரூ 15 லட்சரூபாய் சேகரிக்கப்பட்டு, அதற்குரிய நிவாரணத்  திட்டப்பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Whats App Group link