'மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்' என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராக ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கடந்த 8 நாள்களுக்கும் மேலாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்குப் பல்வேறு அரசு ஊழியர்கள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறிவருகிறது. ``பணிக்குத் திரும்பாமல் இருக்கும் ஆசிரியர்கள், ஊழியர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளதுடன் 1,300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதைக் கண்டுகொள்ளாமல் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கருவூலத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Sponsored

இந்நிலையில், 'அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்' என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``முன்னறிவிப்பு கொடுத்து நடத்திய போராட்டங்களுக்குப் பிறகும், எடப்பாடி பழனிசாமியோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ போராடுவோரை அழைத்துப் பேசுவதற்கான அக்கறையோ, பரிவோ அவர்களிடம் கிஞ்சிற்றும் இல்லை என்பதை நிரூபித்துவருகிறார்கள். அடக்குமுறை மூலம் நியாயமான உணர்வுகளை ஒடுக்கி நசுக்கிவிடலாம் என்று எண்ணி நள்ளிரவில் கைது, தற்காலிகப் பணி நீக்கம், டிஸ்மிஸ் செய்வோம் எனும் மிரட்டல், என்றெல்லாம் ஜனநாயக நாட்டில் “ஹிட்லர் பாணியில்” ஒரு முதல்வர் செயல்பட்டிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.

Sponsored

"முதல்வர் அழைத்துப் பேசினால் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளத் தயார்" என்று அரசு ஊழியர்கள் தெரிவித்தும், "பேச்சுவார்த்தை நடத்தும் பேச்சுக்கே இடமில்லை" என்று நீதிமன்றத்தில் சர்வாதிகாரச் சதி எண்ணத்தோடு கூறியிருக்கும் முதல்வருக்கு மனித நேயமும் இல்லை; மாநில நிர்வாகத்தில் உரிய ஆர்வமும் இல்லை. "எப்படியும் தேர்தலில் தோற்கப்போகிறோம். இருக்கின்ற வரை ஊழல் செய்வதில் மட்டுமே அக்கறை காட்டுவோம்" என்று செயல்படும் ஒரு முதல்வரிடமிருந்தோ, அவர் தலைமையில் இருக்கும் அரசிடமிருந்தோ எவ்வித நியாயத்தையும் நீதியையும் எதிர்பார்க்க முடியாது என்பதை ஜாக்டோ - ஜியோ அமைப்பு நிர்வாகிகளும், போராட்டக் களத்தில் உள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உணர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அ.தி.மு.க அரசு அராஜகத்தையும், அதிகார ஆணவத்தையும் மட்டுமே நம்பியிருப்பதால், மாணவர்கள், மக்கள் நலன் கருதி போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டக் களத்தில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதுநாள் வரை போராடிய ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், தி.மு.க ஆட்சி அமையும் வரை பொறுமைகாக்குமாறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் உரிய முறையில் நியாயமாகப் பரிசீலித்து நிறைவேற்றப்பட்டு, அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ரத்துசெய்யப்படும் என்றும் உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.