த ற்போது தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரிவிலக்குக்கான வரம்பு 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக
உயர்த்தப்பட்டது, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சம்பளதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீட்டிக்கவில்லை. 5 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் ஈட்டுபவர்கள், முன்பிருந்த வருமான வரிவிலக்கு வரம்புப்படியே வரிசெலுத்த வேண்டுமென்றும், அவர்களுக்கு இந்த பட்ஜெட்டால் எந்தச் சலுகையும் கிடையாது என்றும் தெரியவந்துள்ளது.

வருமான வரிச்சலுகையில் ஏன் இந்தக் குழப்பம், உண்மையில் என்ன மாற்றம் செய்துள்ளார்கள் என்று ஆடிட்டர் கே.ஆர்.சத்யநாராயணனிடம் பேசினோம். ``இந்த இடைக்கால பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்குக்கான வரம்பை மாற்றவில்லை. அதற்குப்பதிலாக, வருமான வரிச்சட்டம் செக்சன் 87A-ன்படி, வரி செலுத்தவேண்டிய வருமானம் ரூ.3 லட்சம் வரை இருந்தால் 2,500 ரூபாய் தள்ளுபடி என்று இருந்ததை, ரூ.5 லட்சம் வரை இருந்தால் 12,500 ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளார்கள்" என்றார்.



இதுகுறித்து விரிவாகக் கூறும்போது, ``இந்தியா, வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இருக்கவேண்டுமென்றால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். தற்போது இந்தியாவில் உள்ள மொத்த மக்கள்தொகை சுமார் 130 கோடி. இதில் வரிசெலுத்துவோர் 6 கோடி பேர் மட்டுமே. இந்த எண்ணிக்கையே ஜி.எஸ்.டி.க்குப் பிறகுதான் உயர்ந்துள்ளது. முன்பு 2 கோடி பேர் வரை மட்டுமே வரித்தாக்கல் செய்து வந்தனர். இச்சூழலில், வருமான வரிவிலக்குக்கான வரம்பை 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தினால், ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை உள்ளவர்கள் வரித்தாக்கல் செய்யத் தேவைப்படாது. எனவே வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 4 கோடி வரை குறைவதற்கான சூழல் உள்ளது.
அதைத் தவிர்ப்பதற்காகவே வருமான வரிவிலக்கு வரம்பை உயர்த்தாமல், தள்ளுபடியை மட்டும் உயர்த்தியுள்ளார்கள். எனவே, அடிப்படை வரிச்சலுகை வரம்பு ரூ.2.5 லட்சமாகத்தான் இருக்கிறது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5%, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20%, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் வரும்போது 30% என்ற வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றம் ஏதும் இல்லை. எனவே, 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள், வரிசெலுத்த தேவையில்லை என்றாலும், வரித்தாக்கல் செய்தாக வேண்டும்.

உதாரணமாக, ஒருவரின் வரி செலுத்தவேண்டிய வருமானம் 5 லட்சத்து 100 ரூபாய் எனில், அவர் செலுத்தவேண்டிய வரி, 12,500 ரூபாய் + கூடுதல் தொகை 100 ரூபாய்க்கான வரி ரூ.20 + ரூ.501 (கல்வி வரி 4%) சேர்த்து மொத்தம் ரூ.13,021 செலுத்த வேண்டியிருக்கும்.


மூத்த குடிமக்களைப் பொறுத்தவரை, அவர்கள் 10,000 ரூபாய்க்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தால் அதற்கு டி.டி.எஸ் பிடித்தம் செய்யும் விதிமுறை இருந்தது. இதன்காரணமாக அந்த டி.டி.எஸ் ரீஃபண்டுக்காக அவர்கள் அலையவேண்டிய சிரமம் இருந்தது. தற்போது அந்த வரம்பு 40,000 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர்களது சிரமம் சற்று குறையக்கூடும்." என்றார்.

இன்றைய காலகட்டத்தில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துவருவதால், வருமான வரி குறித்த விழிப்புஉணர்வு அனைவருக்கும் அவசியமாகிறது. தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரிச்சலுகைகள் அடுத்துவரும் 2019-20 நிதியாண்டில் செயல்படுத்தப்படும். எனவே, தனிநபர் வருமான வரிவிலக்குக்கான வரம்பு குறித்த தெளிவுபெற்றுக்கொண்டால் குழப்பம் இல்லை

Whats App Group link