Join Whats App Group Link -Click Here


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 121

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

உரை:
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

பழமொழி:

Great minds think alike

பேரறிஞர்கள் ஒரே மாதிரியாக சிந்திப்பர்

பொன்மொழி:



வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

அடால்ஃப் ஹிட்லர்:

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) டயாலிஸிஸ் இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்?
வில்லியம் கோல்ப்

2) உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
நெதர்லாந்து.

நீதிக்கதை :

உணவு எப்போது ருசிக்கும்?

குறிஞ்சிக்காட்டிலுள்ள மரப்பொந்தில் அம்மா அணிலும் குட்டி அணிலும் வசித்தன. அதே மரத்தில் வசித்த கிளி, குருவி, குட்டி அணில் மூன்றும் நண்பர்களாக இருந்தன.

கிளியும் குருவியும் தங்களுக்குச் சாப்பிட என்ன கிடைத்தாலும் அதில் ஒரு பங்கை குட்டி அணிலுக்கும் கொண்டுவந்து கொடுத்தன. ஆனால், குட்டி அணிலோ சுயநலமாக இருந்தது. தனக்குக் கிடைக்கும் உணவை மரப்பொந்துக்குள் ஒளித்து வைத்துவிடும். நண்பர்கள் சென்ற பிறகு எடுத்துச் சாப்பிடும்.

அம்மா அணிலுக்குத் தன் குட்டியின் இந்தக் குணம் பிடிக்கவில்லை. ‘இவன் இப்படிச் சுயநலமாக இருக்கிறானே’ என்று கவலைப்பட்டது.

ஒருநாள் குட்டி அணில் வெளியே சென்றது. காட்டில் அங்குமிங்கும் வேடிக்கை பார்த்தபடி மலையடிவாரத்துக்கு வந்துவிட்டது. அங்கே உயர்ந்த மரத்தில் பெரிய பழம் ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தது.

‘இதுவரை இவ்வளவு பெரிய பழத்தைப் பார்த்ததில்லையே! இது என்ன பழமாக இருக்கும்? என்று நினைத்துக்கொண்டே, மரத்தில் ஏறியது குட்டி அணில்.

பழத்தின் மீது இருந்த முட்களைப் பார்த்ததும் கொஞ்சம் திகைத்தது. அந்தப் பழத்தைச் சுவைக்காமல் செல்வதிலும் விருப்பம் இல்லை. மெதுவாகத் தொட்டுப் பார்த்தது. முட்கள் கூர்மையாக இல்லை. கூரிய பற்களால் பழத்தைக் கடித்தது. ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை.

சில நிமிடங்களுக்குப் பிறகு பழத்தில் ஒரு துளை போட்டுவிட்டது குட்டி அணில். வாசனை இழுத்தது. முன்னங்கால்களைப் பழத்துக்குள் விட்டுப் பிடித்து இழுத்தது. ஒரு சுளை கையோடு வந்தது. சுவைத்துப் பார்த்தது.

“அடடா! என்ன ஒரு அற்புதமான சுவை! இதுவரை இந்தப் பழத்தை நான் சுவைத்ததில்லை. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது. தினமும் வந்து சாப்பிடலாம்” என்று சொல்லிவிட்டு, மரக் கிளைகளை ஒடித்துப் பழத்தை மறைத்து வைத்துவிட்டுத் திரும்பியது குட்டி அணில்.

பொழுது விடிந்தது. கிளியும் குருவியும் குட்டி அணிலோடு விளையாட வந்தன.

“நண்பா, உனக்காகச் சோளமணிகள் கொண்டு வந்திருக்கிறேன்” என்று நீட்டியது குருவி. கிளி தன் பங்குக்குக் கொய்யாப்பழத்தைக் கொடுத்தது.

“நண்பர்களே, எனக்குப் பசி இல்லை. முக்கியமான வேலையாக வெளியே போகிறேன். நான் வந்த பிறகு விளையாடலாம்” என்று பொய் சொன்னது குட்டி அணில்.

குருவியும் கிளியும் ஏமாற்றத்தோடு சென்றன. பெரிய பழம் சாப்பிடும் ஆசையில் வேகமாக ஓடியது குட்டி அணில். மரத்தின் மீது ஏறியது. ஆனால், அங்கே அந்தப் பழம் இல்லை. காம்பு மட்டுமே எஞ்சியிருந்தது.

அதிர்ச்சியில் அங்கும் இங்கும் தேடியது. அந்தப் பழத்தின் தோலும் கொட்டைகளும் சிதறிக் கிடந்தன.

“நேற்று நான் சாப்பிடுவதை யாரோ மறைந்திருந்து கவனித்திருக்கிறார்கள். நான் சென்ற பிறகு பழத்தை எடுத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். என்னை ஏமாற்றிவிட்டார்களே” என்று புலம்பியபடி வருத்தத்துடன் திரும்பியது குட்டி அணில்.

வழியில் பசி எடுத்தது. வேறு பழங்கள் கண்ணில் படவில்லை. சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பிவந்தது.

மரப்பொந்துக்குள் நுழைந்ததும், “அம்மா, பசி வயிற்றைக் கிள்ளுகிறது. ஏதாவது சாப்பிடத் தாருங்கள்” என்று அலறியது குட்டி அணில்.

“எனக்குப் பசியே இல்லை என்று உன் நண்பர்களிடம் சொன்னாய். இப்போது பசி தாங்க முடியவில்லை என்று சொல்கிறாய். உண்மையைச் சொல். நீ எங்கே போனாய்?” என்று கேட்டது அம்மா அணில்.

உண்மையை மறைக்க முடியவில்லை. அது நேற்று மலையடிவாரத்தில் தான் சாப்பிட்ட பெரிய பழத்தைப் பற்றிச் சொன்னது. அம்மா அணிலுக்குச் சிரிப்பு வந்தது.

“நேற்று நீ தின்ற பழத்தின் பெயர் பலா. முழுப் பழத்தையும் நீயே சாப்பிட வேண்டும் என்று நினைத்திருக்கிறாய். அதனால் அதைப் பற்றி உன் நண்பர்களிடம்கூடச் சொல்லாமல் மறைத்துவிட்டாய். அவர்களுக்கும் அதைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. பலாப்பழத்தைப் பிளந்துவிட்டால் அதன் வாசம் வெகுதூரம்வரை வரும். நீ வந்த பிறகு குரங்கு, வவ்வால் போன்றவை அந்தப் பழத்தின் வாசத்தை வைத்து அங்கே வந்து தின்றிருக்கலாம். இந்தக் காட்டிலுள்ள பழங்கள் அனைத்தும் எல்லா உயிரினங்களுக்கும் சொந்தமானவை. யாரும் தனியாகச் சொந்தம் கொண்டாட முடியாது” என்றது அம்மா அணில்.

“நான் தானே அதை முதலில் கண்டுபிடித்தேன். எனக்குதான் அது சொந்தம்” என்றது குட்டி அணில்.

“உணவு எப்போது ருசியாக இருக்கும் தெரியுமா? அதைப் பகிர்ந்து உண்ணும் போதுதான் மிகவும் ருசியாக இருக்கும். ஒரு தடவை நீயும் மற்றவர்களுடன் பகிர்ந்து சாப்பிட்டுப் பார். காலையில் உன் நண்பர்கள் கொண்டுவந்த கொய்யாப்பழத்தையும் சோளமணிகளையும் வைத்திருக்கிறேன், சாப்பிடு. இனிமேலாவது உன் நண்பர்களைப்போல நடந்துகொள்” என்றது அம்மா அணில்.

“அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள்! இனி இப்படிச் சுயநலமாக இருக்க மாட்டேன். எந்த உணவு கிடைத்தாலும் அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பேன்” என்ற குட்டி அணிலை, அம்மா அணில் அணைத்துக்கொண்டது.

இன்றைய செய்தி துளிகள் : 

1) சமூக பணிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் வழங்க முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்

2) போராட்டத்தில் ஈடுபட்ட 3,000 பேர் பணியிட மாறுதல்: நடவடிக்கைகளை திரும்ப பெற ஆசிரியர்கள் வலியுறுத்தல்

3) அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் பதிவேட்டை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்

4) தென் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

5) நியூசிலாந்து எதிரான 5-வது ஒருநாள் போட்டி: 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி... தொடரை வென்றது இந்தியா