ஜெய்ப்பூர், ''தேசிய அளவில் கல்வித் துறையில் மாற்றம் செய்யும் வகையில், புதிய கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ''லோக்சபா தேர்தலுக்கு பின், இந்த புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும்,'' என, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவேடகர் கூறியுள்ளார்.நம் நாட்டில், 1986ல், தேசிய அளவிலான கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு, 1992ல், மாற்றம் செய்யப்பட்டது. கடந்த லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ., கட்சியின் தேர்தல் அறிக்கையில், 'நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும்' என, கூறப்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றபின், புதிய கல்விக் கொள்கையை உருவாக்க, முன்னாள் அமைச்சரவை செயலர், டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு, 2016ல், பரிந்துரைகளை சமர்ப்பித்தது.கடந்த ஆண்டு ஜூனில், இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கன் தலைமையில், மற்றொரு குழு அமைக்கப்பட்டது. புதிய கல்வி கொள்கையை இறுதி செய்வதற்காக, கஸ்துாரி ரங்கன் தலைமையிலான குழுவின் பணிக்காலம், ஐந்து முறை ட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவேடகர் கூறியதாவது:கஸ்துாரி ரங்கன் தலைமையிலான குழு, புதிய கல்வி கொள்கையை தயாரித்து அளித்துள்ளது. அதன், ஹிந்தி மொழி பெயர்ப்பும் முடிந்துவிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், தற்போது, புதிய கொள்கையை அமல்படுத்த முடியாது.தேர்தலுக்கு பின், புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.