கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வரும் ஏப்ரல் 22 -ஆம் தேதி முதல் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



 இது குறித்த விவரம்: குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (2009), சட்டப் பிரிவு 12(1) இன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை (எல்கேஜி) வகுப்புக்கு 25 சதவீத இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் கடந்த 2013-14 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் நோக்கம், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெற வழிவகை செய்யப்படுவதாகும். இதற்காக, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கும், கூடுதல் வழிகாட்டுதல், திருத்திய கால அட்டவணை ஆகியவை ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.



 அதன்படி, வரும் 2019-20 ஆம் கல்வியாண்டுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 517 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிக்-மழலையர்-தொடக்கப்பள்ளி) நுழைவு நிலை (எல்கேஜி) வகுப்பில் சேர்க்கை தொடங்கப்படவுள்ளது. இதில், 25 சதவீத ஒதுக்கீட்டின்படி 6,718 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. தகுதியுடையோர் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். குழந்தைகளின் பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அளிக்கப்படும். இணையதளம் வழியாக ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் மே 18 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.


அத்துடன், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இன்றி விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அரசு இ-சேவை மையங்களிலும் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்படும் போது குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.



 இதில், ஆதரவற்றவர், ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்பரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும். எனவே, குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலின்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here