விருதுநகர் மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் குறு அறிவியல் மையம்

படவிளக்கம் :CEO, CEO1, CEO2: பனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குறு அறிவியல் மையத்தை திங்கள்கிழமை திறந்து வைத்து பார்வையிட்டார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன்.

விருதுநகர், ஏப்.1: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியத்தில் நெய்வேலி லிக்னைட் கார்பரேசன் சார்பில் 5 அரசுப் பள்ளிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் குறு அறிவியல் மையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பனையூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் குறு அறிவியல் மையத் திறப்பு விழா நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் துணைப் பொது மேலாளர் சிந்துபாபு தலைமையில் நடைபெற்றது. பொது மேலாளர் கே.கணேசன் வரவேற்றார்.

மையத்தைத் திறந்து வைத்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் பேசுகையில் கூறியதாவது: நாட்டில் 115 மாவட்டங்களை மத்திய அரசு வளர்ச்சியடைகின்ற மாவட்டமாக அறிவித்தது. இதில் விருதுநகர் மாவட்டமும் ஒன்றாகும். சுகாதாரம், வேலைவாய்ப்பு, கிராம வளர்ச்சி, தனி நபர் வருமானம் முதலியவற்றைக் கருத்தில் கொண்டு இது அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நரிக்குடி பகுதியில் விவசாயம் மிகவும் குறைவு.

பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை இது போன்ற பின் தங்கிய பகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடுகின்றது.

தற்போது நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம், மாவட்டத்தின் பின்தங்கிய திருச்சுழி ஒன்றியத்தில் உள்ள பனையூர், திருச்சுழி, தமிழ்பாடி, எம்.ரெட்டியபட்டி, கே.செட்டிகுளம் ஆகிய இடங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பில் குறு அறிவியல் மையம் அமைத்துக் கொடுத்துள்ளது. பின்தங்கிய பகுதியில் உள்ள மாணவர்கள் பயன்படுவதற்காக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளைச் சுற்றியுள்ள நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்களும் இந்த ஆய்வகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.மாநிலத்தில் திருநெல்வேலியில்மட்டும் மாவட்ட அறிவியல் மையம் உள்ளது. மாநிலத்தில் எந்தப் பள்ளியிலும் இல்லாத சிறப்பான அறிவியல் உபகரணங்களை நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்த மையங்களுக்கு வாங்கிக் கொடுத்துள்ளது. மாணவ மாணவியர் 100 சதவீதம் இந்த மையத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மையத்தைப் பயன்படுத்தும் முறை குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்கள்ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவியர், ஆசிரியர்கள் நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனின் தலைமை பொறியாளர் ஜீவா முருகேசன், துணை மேலாளர் பட்ஷா வரகல்ராவ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தானகிருஷ்ணன், திட்ட அலுவலர்கள் உதயகுமார், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைமை ஆசிரியை பி.ஹேமா நன்றி கூறினார்.

Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here