பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவரும் நாள்கள் ஒவ்வொரு ஆண்டும் பரபரப்பானதே. கொண்டாட்டங்களுக்கு மத்தியில் எந்த ஒரு குழந்தையும் விரும்பத்தகாத முடிவுகளை எடுத்துவிடக் கூடாதே என்ற பதற்றமும்  நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால், பல நேரங்களில் வேதனைப்படும் சம்பவங்கள் நடந்தே விடுகின்றன.
அடிப்படையில் ஆசிரியரான நான், இது குறித்து என்னுடைய இரு மகன்களோடும் பள்ளியிலுள்ள குழந்தைகளோடும்  ஆழமான விவாதங்களை மேற்கொண்டது உண்டு. அண்மையில் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் சில வினாத்தாள்கள் கடினமானதை ஒட்டியே  சில மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தேர்வு முடிவுகளும் தற்கொலைகளும் அதற்கான தயாரிப்புகளும்  கூடுதல் கவனம் பெறுகின்றன.
தேர்வு என்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக மாற்றப்பட்டதன் விளைவை நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தேர்வு என்பது, வகுப்பறைகளில் கற்பவற்றை சுமார் இரண்டரை  அல்லது மூன்று  மணி நேரங்களில் சோதிப்பதுதானே. எப்படியும் ஆண்டு முழுவதும் பயின்ற அனைத்தையும் சோதிக்க இயலாது என்பதாலேயே இந்த வரையறை. என்ன செய்யலாம்?  வகுப்பறைகளில் மாணவர்களுக்கு அவர்களின் மன வயதுக்கேற்ப  அனைத்து விதமான  விஷயங்களையும் கற்றுத் தேறப்  பயிற்சி அளிக்கலாம். அனைத்தையும்  சாதாரண வகுப்பறைத் தேர்வுகளில் சோதிக்கலாம். தவறு செய்யும் இடங்களில் திருத்தலாம். இதில் ஆகப் பெரிய பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை.
ஆனால், பொதுத்தேர்வு என்று வரும்போது அனைத்து விதமான பின்புலம் உள்ள மாணவர்களும்  தேர்ச்சி பெறும் வண்ணம் வினாத்தாள் இருக்க வேண்டும். அதாவது, அடுத்த நிலை கல்விக்கு அவர்கள் உற்சாகம் பெற்றுச் செல்லும் வகையில் அமைய வேண்டும். நான் ஆசிரியர் பணியில் சேர்ந்த புதிதில், தேர்வை கண்டிப்பாக நடத்து; திருத்துவதை கனிவோடு செய் என எனக்கு  தலைமையாசிரியர்களாக இருந்த பலரும் ஆலோசனை கூறுவர். இது  பொருள் பொதிந்தது. அதாவது, தேர்வு வரை மாணவர்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்திவிட்டு மதிப்பீடு செய்யும்போது கனிவாகத் தட்டிக் கொடுப்பதுபோல் செய்யவேண்டும் என்பதே இதன் மறைபொருள்.
சுருக்கமாகச் சொன்னால் சிறிது சிறிதாக அனைத்துக் கேள்விகளுக்கும்  பயிற்சியளித்து தேர்வென்பது வரும்போது, அவற்றில் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடை  தெரிந்ததாக அமைய வேண்டும். இப்படியே பொதுத் தேர்வுகளுக்கான தயாரிப்பும் நடைபெறுகிறது.
இவ்வாறு பயிற்சி பெற்றுள்ள மாணவர்களுக்குக்கூட  எளிதாக இருக்கவேண்டிய  சில கேள்வித்தாள்கள், சராசரி மாணவர்களின் பார்வையில்  கடினமாக அமைந்ததே பேசும் பொருளாகியுள்ளது.  அதாவது, மாணவர்கள் இப்போது சந்திப்பது போன்ற வினாக்களுக்கு விடையளிக்க பயிற்றுவிக்கப்படவில்லை என்பதே உண்மை. அரசும் கல்வித் துறையும் இந்த விஷயத்தில் மாணவர்களுக்கு நியாயம் செய்வார்கள் என நம்புவோம்.
பொதுவாகவே, மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவதில் காட்டப்படும் கடைசிநேர பரபரப்பு  என்பது சமூகத்தில் பேசும் பொருளாக வேண்டும். பெற்றோர் இதில் கூடுதல் அக்கறை காட்டவேண்டும். தற்கொலை போன்ற உளவியல் ரீதியான குறைபாடுகளைப் போக்குவதில் குடும்பமும்  சமூகமுமே  பெரும் பங்கு வகிக்க இயலும். ஆனால், நடைமுறையில்  நடப்பது வேறாக உள்ளது.  ஒருபுறம்  வருமானம் உறுதி செய்யப்பட்ட குடும்பங்கள், மறுபுறம் உழைப்பாளி மக்களாய் உள்ள தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட குடும்பங்கள். இவை இரண்டிலுமே மாணவர்களின் உளவியல் ரீதியான எழுச்சிகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. 
பெரும்பாலான பெற்றோர் என்ன செய்கின்றனர்?  பொதுத் தேர்வுக்கு குழந்தைகளைத் தயார்படுத்தும் வாய்ப்புகளை பெற்றோர் தொடர்ந்து தவற விட்டு, கடைசி நேரத்தில் தங்களது குழந்தைகளை பதற்றப்படுத்துவது நடக்கிறது. மகன் அல்லது  மகளை ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும்போதே  பத்தாண்டுகளில் (சுமார் 3,650 நாள்கள்) தமது குழந்தை பொதுத் தேர்வெழுதவேண்டும் என்பது தெரியும்தானே. எத்தனை பேர்  படிப்படியாகத் தயாராவதை உறுதிப்படுத்துகிறோம். ஒன்பதாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தவுடன்  பெரும் பதற்றம் காட்டுகிறோம். அதாவது,  3,650 நாள்கள் பணியை 730 நாள்களில் செய்ய முற்படுகிறோம். இன்னும் சிலர் 365 நாள்களில் என்பதை 200 நாள்களில் எனக் குறைத்துக் கொண்டே வருவதும் உண்டு.
இந்த நிலையில் துவக்கம் முதலே ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம்  படிப்பில் கவனம் செலுத்துவதை  நடைமுறைப்படுத்திக் கொள்ளாத குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இவ்வாறான குழந்தைகளுக்கு வழிகாட்ட இயலாதோர் தனிப் பயிற்சி மையங்களுக்கு அனுப்பி விடுகின்றனர். பள்ளி ஆசிரியரின் பணி, பெற்றோரின் பணி இரண்டையும் கூடுதலாக கவனிக்க வேண்டிய பொறுப்பை அவர் ஏற்று அல்லல்பட வேண்டியதாகிறது.
இது ஒருபுறமென்றால் தமது அன்றாட வாழ்க்கையே போராட்டமாயிருப்போர் பலரால் பொதுத்தேர்வு ஆண்டுகளிலும்  கவனம் செலுத்த இயலாத நிலையே  உள்ளது. அப்படிப்பட்ட குடும்பங்களில் தாமாகவே முன்வந்து மாணவர்கள் படிப்பதைத் தவிர வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.  அப்படியும் பலர் சாதிக்கின்றன  என்பதை நாம் செய்தித்தாளில் காண்கிறோம். இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டே கல்வித் துறை செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.
இன்றைய நாள்களில் இன்னொரு கலாசார பாதிப்பும் உள்ளது. அதுதான் செல்லிடப்பேசி.   இதில் பெற்றோரே மூழ்கியுள்ள நிலையில் அவர்களின் குழந்தைகள் இணைந்து மூழ்குவதைக் கவனிப்பதில்லை. ஒருகாலத்தில் தொலைக்காட்சி வகித்த இடத்தை இப்போது செல்லிடப்பேசிகள் வகிக்கத் தொடங்கிவிட்டன. தொலைக்காட்சிகளிலாவது 
நிர்ணயிக்கப்பட்ட நிகழ்வுகள்தான் அரங்கேறும். ஆனால், செல்லிடப்பேசியோடு இணைந்த யு டியூப் போன்ற வசதிகள் எல்லா நேரத்திலும் தேவையானதைத் தேடிக் காணும் காலமாக்கியுள்ளது.இவ்வாறு செல்லிடப்பேசியில் ஒரே இடத்தில் செலவாகும் நேரத்தினால் சுத்தமான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பையும்  இழக்கின்றனர். பின் எப்படி மூளைக்கு புதிய பிராண வாயு சென்று படைப்பாற்றலைத் தூண்ட இயலும்?
 இது பெற்றோர், சமூகத்தின் தரப்பு என்றால், அரசின் கல்வித் துறையின் கூடுதல் கவனமும் இதில் ஈர்க்கப்படவேண்டிய அவசியம் உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய இரண்டு சான்றிதழ்களிலும் இடைநிலைக் கல்வியை, உயர்நிலைக் கல்வியை விட்டு விலகும் சான்றிதழ் என்றே சான்றளிக்கிறோம். அதாவது, செகன்டரி ஸ்கூல் லீவிங் சர்ட்டிபிகேட் என்பதே சான்றிதழின் முகப்பு.
எந்த ஒரு பணிக்கும் தேவையான அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக் கொண்டு அடுத்து வேலைவாய்ப்புக்கான பயிற்சிக்காக விலகுகிறோம் என்ற பொருளிலேயே இது இவ்வாறு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் இவ்வாறு தேர்ச்சியடைவோர் அடுத்தபடியாக பட்டயமோ, பட்டமோ பெற்ற பின்னர் அடுக்கடுக்கான தேர்வுகளைச் சந்தித்தபின்னரே வேலைவாய்ப்புக்குத் தகுதியாக தம்மை ஆக்கிக் கொள்ளப் போகின்றனர். இந்த நிலையில் அனைவரும் ஒரே வகையான வேலைவாய்ப்புக்குச் செல்ல வாய்ப்பில்லாத நிலையில்  எதற்காக பத்து, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை கடினமானதாக வடிவமைத்துச்  சிரமப்படுத்த வேண்டும் என்பதே கல்வியாளர்கள் பலரது வாதமாக உள்ளது. 
ஒருவரோ, இருவரோ மருத்துவராக, இந்திய ஆட்சிப் பணியாளராக ஏன் அனைத்து மாணவர்களும் கடினமான பாடங்களைப் பயில வேண்டும்?
அடுத்து ஆசிரியர்கள் தரப்பையும் பார்ப்போம்.  தனியார் பள்ளிகளில் பணிபுரியம் ஆசிரியர்களை ஒப்பிடும்போது, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நிலை பரிதாபமானதே.  அரசுப் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், எவ்விதமான மறுப்புமின்றி அனைத்துத் தரப்பு மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளும் பள்ளிகள் அரசுப் பள்ளிகளே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
திரைப்படங்களும் சமூக ஊடகங்களும்  மாணவர்களை பல்வேறு வகைகளிலும் திசைதிருப்புகின்றன.
இந்த நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் புதுப்புது சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பதின்பருவ வயதினரை கையாள்வது குறித்து சமூகம் முழுமைக்குமான புரிதல் மேம்படவேண்டிய நிலையில், ஆசிரியர்களை மட்டும் குறை சொல்வதும் பொருளற்றதாகும்.
ஒரு மாணவரின் மரணம் என்பது வாசிக்கும் நமக்குச் செய்தி. ஆனால், அந்த குடும்பத்தைச் சேர்ந்தோர்க்கு அப்படிக் கடக்கும் விஷயமல்ல. உலகில் நம்மைப் புரிந்துகொண்டோர் ஒருவர் உள்ளார் என்ற நம்பிக்கை மட்டும்  ஒவ்வொருவருக்கும் கிடைத்தால் போதும்.   பல தற்கொலை எண்ணங்கள் தற்கொலை செய்து கொள்ளும்.

கட்டுரையாளர்:
கல்வியாளர்.